/* */

நடிகர் கமல்ஹாசன் உறுதுணையானவர்… உத்வேகம் அளிப்பவர்: தேவி ஸ்ரீபிரசாத்

Actor Kamal Haasan -இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் 'ஓபெண்ணே' பாடலை வெளியிட்டு, அவரை வாழ்த்திப் பேசினார் நடிகர் கமல்ஹாசன்.

HIGHLIGHTS

நடிகர் கமல்ஹாசன் உறுதுணையானவர்… உத்வேகம் அளிப்பவர்: தேவி ஸ்ரீபிரசாத்
X

Actor Kamal Haasan -டிசீரிஸ் சார்பில் பூஷண் குமார் தயாரிப்பில், 'ஓ பெண்ணே…' பாடல் நேற்று(09/10/2022) சென்னையில் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் அவரே இசையமைத்து எழுதியுள்ள இப் பாடலுக்கு அவரே பாடியதோடு மட்டுமில்லாமல் நடனமும் ஆடி இயக்கியும் உள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இப் பாடலை வெளியிட்டார்.

விழாவில், ஏராளமான திரையுலகப் பிரபலங்களும் பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இப் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ''முதலில் கமல் சாருக்கு எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல் சாரைப் பொறுத்தவரையில், நான் எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு எப்போதுமே உறுதுணையாகவும் உத்வேகம் அளிக்கக்கூடியவராகவும் இருக்கிறார். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சர்வதேசப் பாடலின் ஐடியாவை, நான் முதலில் கமல் சாரிடம்தான் கூறினேன். அவர் அளித்த உற்சாகமும்தான் நான் இந்தப் பாடலை விரைவாகவும் சிறப்பாகவும் செய்திடக் காரணமானது.

இசையின் மேல் அவருக்கு இருக்கும் பிரியமும் ஈடுபாடும்தான் என்னையும் அவரையும் ஒன்றிணைக்கக் காரணமாக இருந்துள்ளது. எனவேதான், இப்பாடலை கமல் சாரே வெளியிட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். என் விருப்பத்தை அவர் நிறைவேற்றியிருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.

கொரோனா காலத்தில், சுயாதீனக் கலைஞர்கள் வெளியே வர வேண்டும் என்பதற்காகத்தான், 'ராக் ஸ்டார்' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினேன். இந்தப் பாடலின் நோக்கமே சுயாதீனக் கலைஞர்கள் அனைத்து மொழிகளிலும் தங்கள் திறமையைக் காட்ட வெளியே வரவேண்டும் என்பதுதான்.

இனிமேல் வருகின்ற சுயாதீனக் கலைஞர்கள் அனைவருமே பல மொழிகளில் அவரவர் திறமைகளைக் காட்டி பாடல்களை உருவாக்க வேண்டும். மேலும், பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொண்டு அனைத்து மொழிகளிலும் இசையமைக்க வேண்டும்.

தற்போது, வெளியிட்டிருக்கின்ற இந்த பான் இந்தியா பாடல் ஆல்பத்துக்கு, ரசிகர்கள் அனைவரின் பேராதரவும் தேவை. அண்மையில், இந்தியில் இப்பாடல் ஆல்பம் வெளியாகி, நல்லதொரு வரவேற்பைத் பெற்றுத் தந்தது'' என்றார் மகிழ்ச்சிப் பொங்க.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தைத் தொடர்ந்து பேசிய, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ''பல நாட்களாகவே தேவி ஸ்ரீபிரசாத்தை எனக்குத் தெரியும். அவர் என்னை அதிகம் வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். பல சாதனைகளைப் படைத்ததோடு மட்டும் நிற்காமல், அடுத்தடுத்து என்ன செய்யலாம் என தேடலோடு உத்வேகமாக நகர்ந்துகொண்டே இருக்கிறார். சிறந்த இசைக் கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம் இது.

தேவி ஸ்ரீபிரசாத்துக்கான வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும். இவருக்கான வெற்றி தாமதமாகிக்கொண்டு இருக்கிறதே என்றுதான் எண்ணியெண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.இவருக்கு உங்களின் ஆதரவு அவசியம் தேவை. திரையிசைப் பாடல்களைத் தாண்டி சுயாதீனப் பாடல்கள் நிறைய வர வேண்டும். இசைக் கலைஞர்கள் அதை அதிகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்துகொண்டே உள்ளது.

திரை இசை என்பது அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுதான். ஆனால், சுயாதீனப் பாடல்கள்தான் இசைக் கலைஞர்கள் தங்களுடைய முழுத் திறமையையும் வெளிக்காட்ட ஒரு பாதையாக இருக்கும். இந்தியாவைத் தவிர, மற்ற நாடுகளைப் பொறுத்தவரை, திரைப் பிரபலங்களைவிட சுயாதீனக் கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள்.

திரைப்படங்களைவிட மிகப் பெரிய துறையாக இசைத் துறை வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு உண்டான தகுதி அதற்கு இருக்கிறது. அதனால், அதற்கு உங்கள் அனைவரது ஆதரவும் தேவை. பழைய காலத்தில் இது அதிகமாக இருந்தது. இப்போது மீண்டும் அது வர வேண்டும். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இந்தப் பாடல் பெரும் வெற்றியைப் பெற வேண்டும். தமிழ்த் திரையுலகிலும் இவர் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பாடலுக்கு உறுதுணையாக இருந்த பூஷண் குமாருக்கு நன்றி'' என்று வாழ்த்திப் பேசினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Oct 2022 9:11 AM GMT

Related News