நடிகர் கமல்ஹாசன் இயக்குனருக்கு சொகுசு கார் பரிசு

நடிகர் கமல்ஹாசன் இயக்குனருக்கு சொகுசு கார் பரிசு
X

இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு சொகுசு கார் பரிசு அளித்த நடிகர் கமல்ஹாசன்.

வசூலில் சாதனை படைத்துவரும் விக்ரம் படத்தின் வெற்றிக்காக, படக்குழுவினருக்கு கமல் காஸ்ட்லி பரிசுகள் வழங்கி அசத்தியுள்ளார்.

'விக்ரம்' படம் திரையிட்ட நாள் முதல் தினம்தினம் திணறடிக்கும் அப்டேட்கள் அசத்தலாகப் பரவி வருகின்றன. உலகமெங்கும் கடந்த ஜூன் 3-ம் தேதி ரிலீஸான 'விக்ரம்' இதுவரை வசூலில் சுமார் 175 கோடியை நெருங்கியுள்ளதாக தெரியவருகிறது. இன்னும் சில தினங்களில் இது 500 கோடியை எட்டலாம் என்கிற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், படத்தின் வெற்றியையும் மகிழ்வையும் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் பரிசுகள் வழங்கிக் கொண்டாடி வருகிறார் கமல். ஆம்...படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் ரக சொகுசு காரை பரிசாக வழங்கி உள்ளார் கமல்ஹாசன். ஜப்பான் தயாரிப்பான இந்த சொகுசு கார் பல்வேறு ஹைடெக் வசதிகளைக் கொண்டதாகும்.இதன் விலை 75 லட்சத்துக்கும் மேல் என்கிறார்கள்.

அதோடு இந்தப் படத்தில் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய 13 பேருக்கும் தலா ஒரு டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக மோட்டார் பைக்கை பரிசாக வழங்கி உள்ளார். ஒரு பைக்கின் விலை ஒண்ணேகால் லட்சத்துக்கு மேலாம். இந்தப் பரிசு மழையால் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அவரது உதவி இயக்குநர்களும் கமலின் அன்பில் நெகிழ்ந்து போயுள்ளனர்.

தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் படம் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து, படம் வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த வெற்றியை சாதகமாக்கிய ரசிகர்களுக்கு, அந்தந்த மொழியில் நன்றி தெரிவித்து, தனித்தனியாக வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். தமிழில் பேசிய வீடியோவில் நடிகர் கமல்ஹாசன், ''தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் 'விக்ரம்' படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.

தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகர் படை இதற்கு முக்கியக் காரணம். கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே நடித்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம்.

லோகேஷிற்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் அன்பு, படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் இன்டர்நேஷனலின் ஊழியன், உங்கள் நான்'' என்று மகிழ்ச்சித் ததும்பத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!