மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறார் நடிகர் பாக்யராஜ்

மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறார் நடிகர் பாக்யராஜ்
X

நடிகர் பாக்யராஜ்.

நடிகர் பாக்யராஜ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் விரைவில் வெளி வர உள்ளது.

தமிழ் திரை உலகில் பாரதிராஜா இயக்குனர் இமயம் என போற்றப்படுகிறார். அதற்கு காரணம் சென்னை தவிர வெளியிடங்களுக்கு செல்லாமல் ஸ்டூடியோவில் வைத்தே அனைத்து செயற்கையான செட்களையும் போட்டு படங்களை தயாரித்து வந்த காலகட்டத்தில் கிராமத்துக்கு வாங்க, இயற்கையை தேடி வாங்க, மண்வாசனையை பாருங்க, வீரம், விவேகம் ,காதல் நிறைந்த உண்மை சம்பவங்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நடந்திருக்கிறது. அவற்றை மையமாக வைத்து கதைக்களம் அமைத்து படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் போக்கையே மாற்றி காட்டியவர் பாரதிராஜா.

அத்தகைய பாரதிராஜாவின் பயிற்சி பட்டறையில் பயின்றவர் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் நீண்ட காலம் இயக்குனர் பாரதிராஜாவிடம் கதாசிரியராகவும் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த பாக்யராஜ் எந்த வித பின்புலமும் இல்லாமல் திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாசிரியராகவும் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய காலகட்டத்தில் நடிப்பின் மீது உள்ள ஆர்வம் காரணமாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின்னர் கதாநாயகனாக படிப்படியாக உயர்ந்தவர்.

பாரதிராஜா படம் என்றால் எப்படி மண்வாசனை இருக்குமோ அதே போல் பாக்கியராஜ் படம் என்றால் குடும்ப கதையம்சம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .1980களில் ஹீரோவாக வெளி உலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட பாக்யராஜ் சுமார் 20 ஆண்டுகாலம் தமிழ் திரை உலகில் முக்கிய நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார். அவர் இயக்கி நடித்த அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, சின்ன வீடு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்கள் எல்லா காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருத்தமான கதை அம்சம் கொண்டவை. எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராக இருந்தபோது பாக்யராஜ் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இதன் காரணமாக ஒரு மேடையில் பாக்யராஜை எனது கலை உலக வாரிசு என எம். ஜி. ஆர். அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காமெடி கலந்த ஹீரோயிசம் அவரது தனி சிறப்பு.

இத்தகைய சிறப்புக்குரிய பாக்யராஜ் தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பாக்யராஜ்'3.6.9'என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். ஒரே நேரத்தில் 24 கேமராக்கள், 150 க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் 450 தொழிநுட்ப கலைஞர்களை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது. படத்தை தயாரிக்கும் பி. ஜி. எஸ். இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பிளாக் பாண்டி, அஜய்கண்ணன், சுகைல்,சத்தி, மகேந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். கேப்டன் எம்.பி. ஆனந்த் இணை தயாரிப்பில் சிவமாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு மாரீஸ்வரன் ஒளிப் பதிவு செய்துள்ளார். இசையமைத்துள்ளார் .

இந்த படத்தின் சிறப்புகள் குறித்து பாக்யராஜ் கூறுகையில் நான் நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக இருப்பேன். ஒரு கைதியின் டைரி படத்தை இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து எடுத்த போது பிடிவாதமாக எழுதிய கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி அது வெற்றியும் பெற்றது. யாருமே முழுதாக சினிமாவை கற்றுக் கொண்டு உள்ளே நுழைவதில்லை. இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவன் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இது இருக்கும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!