தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை நடிகர் அஜித்குமாரின் 'அஜித் 61'..!

தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை நடிகர் அஜித்குமாரின் அஜித் 61..!
X

பைல் படம்.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் நடிகர் அஜித்குமாரின் 'அஜித் 61' படம் தீபாவளிக்கு வராததன் காரணம் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு(2022) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவருவதாக இருந்த 'அஜித் 61' திரைப்படம், தமிழகத்தில் தியேட்டர்கள் கிடைக்காது என்கிற சூழலில் ரிலீஸ் பிளான் ரிவர்ஸில் போய்விட்டது.

நடிகர் கார்த்தி இருவேடங்களில் நடித்துள்ள 'சர்தார்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தமிழ்த் திரையுலகின் முதல்நிலை ஃபைனான்சியரான அன்புச்செழியன் வாங்கியுள்ளார்.

தற்போது, தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களின் தயாரிப்பு, வியாபாரம், பட வெளியீடு என முக்கியத் தீர்மானிப்புகளை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர்தான் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் 'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வர தீர்மானமாகி இருப்பதால், பிற படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம்.

தமிழகத்தில் மொத்தம் 1,100 திரைகள் மட்டுமே தற்போது இயங்கிவருகின்றன. இரு படங்களுக்கும் சமமாக குறைந்தது தலா 400 முதல் 450 வரை தியேட்டர்களாவது கிடைக்கும். மிச்சமுள்ள தியேட்டர்களில் மட்டும் பிற படத்தை திரையிட இயலும். அவ்வாறெல்லாம் அஜித்குமார் படத்தை வெளியிட முடியாது என்பதால்தான், 'அஜித் 61' படம் தீபாவாளிக்கு திரைக்கு வரவில்லை.

பட வெளியீடு தாமதமாகும் என்ற நிலையில், நடிகர் அஜித்குமார் கோடை விடுமுறையை தன் விருப்பப்படி மோட்டார் பைக் பயணம், கார் பயணம் என ஐரோப்பிய நாடுகளில் பொழுதைக் கழித்து வருகிறார்.

'அஜித் 61' திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் அமைக்கப்பட்ட அரங்கில் நடந்து முடிந்தது. படத்தின் அடுத்தகட்ட வேலைகளும் இன்னுமுள்ள படப்பிடிப்புகளும் சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்து நடைபெற உள்ளன.

வங்கிக் கொள்ளை தொடர்பான திரைக்கதையில் ஏற்கெனவே நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் இணையும் மூன்றாவது படம்தான் இன்னும் உறுதியான பெயரிடப்படாத 'அஜித் 61' என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!