"நடிக மன்னன்" பி.யூ.சின்னப்பா காலமான நாளின்று

நடிக மன்னன் பி.யூ.சின்னப்பா காலமான நாளின்று
X

பி.யூ.சின்னப்பா

நடிகர்கள் தெரியும் அது என்ன நடிக மன்னன்?

"நடிக மன்னன்" என்று புகழ் பெற்றவரும், வீரதீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா, யாரும் எதிர்பாராத வகையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். அப்போது, அவருக்கு வயது 35. சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார். சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. "இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது" என்று தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் வீடுகள் வாங்கினார்.


1951ல் "வனசுந்தரி" என்ற படத்தில் சின்னப்பா நடித்தார். ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. படம் சுமார் ரகம். இந்த சமயத்தில், தமிழ்ப்பட உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. எனவே, கதாநாயகனாக நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


1946ல் வெளிவந்த "ஸ்ரீவள்ளி" மூலம், டி.ஆர்.மகாலிங்கம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவானார். "நாம் இருவர்" படம், அவர் புகழை மேலும் உயர்த்தியது. ஜ×பிடர் தயாரிப்பான "ராஜகுமாரி" மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமாகி முன்னேறிக்கொண்டிருந்தார். கே.ஆர்.ராமசாமியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். "சந்திரலேகா", "ஞானசவுந்தரி", "ஏழைபடும்பாடு", "வேலைக்காரி" முதலிய தரமான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று, ரசிகர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், சின்னப்பாவின் முன்னேற்றத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. படம் குறைந்து போனதால், சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.


"வானவிளக்கு" என்ற பெயரில் நடத்தி வந்த நாடகத்தை சொந்தத்தில் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார். கத்திச்சண்டையில் "சுருள் பட்டா" என்பது புதுமையானது; ஆபத்தானது. சுருளின் முனையில் கூரிய கத்தி பொருத்தப்பட்டு இருக்கும். கைப்பிடியை பிடித்தபடி "சுருள் பட்டா"வை வீசினால், கத்தி சுழன்றபடியே சென்று, எதிரியின் தலையை கொய்து கொண்டு வரும்! குறி தவறினால், வீசியவனின் தலைக்கு ஆபத்து! இந்த "சுருள் பட்டா" சாகசச் செயலை "வான விளக்கு" படத்தில் புகுத்த சின்னப்பா திட்டமிட்டிருந்தார். புதுக்கோட்டையில் தன் வீட்டில் தங்கியிருந்த சின்னப்பா, அன்றைய தினம் "மணமகள்" சினிமா படம் பார்க்க நண்பர்களுடன் சென்றார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்திருந்த படம் இது. லலிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா நடித்திருந்தனர். படம் பார்த்துவிட்டு இரவு சுமார் 10 மணிக்கு வீடு திரும்பிய சின்னப்பா, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று, "மயக்கம் வருகிறதே" என்றார். உடனே ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். ஒரு சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். உடன் இருந்த நண்பர்கள் கதறி அழுதனர். சின்னப்பா இறந்தபோது, அவருடைய தந்தை உலகநாதப் பிள்ளை உயிருடன் இருந்தார். மகன் புகழின் சிகரத்தை அடைந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த அவர், மகனின் எதிர்பாராத மரணத்தால் கதறித் துடித்தார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது.


ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சின்னப்பாவின் சொந்த தோட்டத்தில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறக்கும்போது சின்னப்பாவுக்கு வயது 35தான். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது, திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது. இறக்கும்போது, "சுதர்சன்" என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாகி முடிந்துவிட்டன. "கோராகும்பர்" என்ற பெயரில் ஏற்கனவே படமாக வெளிவந்த புராணக் கதைதான் இது.


சின்னப்பாவுடன் ஜோடியாக கண்ணாம்பாவும் (யோக) மங்களமும் நடித்தனர். பாகவதர் நடித்த "ஹரிதாஸ்" படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இப்படத்தைத் தயாரித்தனர். கதை வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமியும், இளங்கோவனும் இணைந்து எழுதினர். "ஹரிதாஸ்" படத்தை இயக்கிய கந்தர்ராவ் நட்கர்னியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர். சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னர் இந்தப்படம் வெளிவந்தது. சரியாக ஓடவில்லை.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!