நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஜோடி முதலமைச்சருக்கு கல்யாண அழைப்பிதழ்..!

நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஜோடி   முதலமைச்சருக்கு கல்யாண  அழைப்பிதழ்..!
X

முதல்வரை சந்தித்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களது திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் தங்களது ஜோடிப் புகைப்படங்களை பதிவிட்டு, தங்கள் காதலை பொதுவெளியில் வெளிப்படுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து, இருவரது ரசிகர்களும் எப்போது திருமணம் என்ற எதிர்பார்ப்புக் கேள்விகளை எழுப்பிவந்தனர்.

இந்தநிலையில்தான் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமண ஏற்பாடுகள் தொடங்கின. அதன் ஒரு பகுதியாகத்தான், அண்மையில் விக்னேஷ் சிவனின் சொந்த ஊரில் திருமணத்தை ஒட்டி குலதெய்வ வழிபாடு நிகழ்ந்தேறியது. அதனைத் தொடர்ந்து, திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டது.

முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, திருப்பதியில் நடக்கவிருந்த திருமணத்தை மகாபலிபுரத்துக்கு மாற்றியதோடு, திருமணத் தேதியிலும் மாற்றம் செய்து, ஜூன் 8-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அடுத்த நாள் ஜூன் 9-ம் தேதி அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் திருமணமும் நிகந்தேறும்படியாக இறுதி செய்யப்பட்டு திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.

திருமணத்துக்கு நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு குறிப்பிட்ட முக்கியப் பிரபலங்கள் என மொத்தம் இருநூறு பேர்களுக்கு அழைப்பிதழ் அளித்து அழைக்கத் திட்டமிட்டனர். அதன்படி, விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமண அழைப்பிதழை அளிக்கத் தொடங்கினர்.

இந்தநிலையில், நேற்று(04/06/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களது திருமண அழைப்பிதழை வழங்கி, முதலமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் திருமணத்துக்கு வருகை தருமாறு அழைத்தனர். அப்போது, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!