'சூரியவம்சம்' படத்துக்கு வயது 25..!

சூரியவம்சம்  படத்துக்கு வயது 25..!
X

சூரியவம்சம் பட போஸ்டர்.

இயக்குநர் விக்ரமன் இயக்கி, சரத்குமார் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த 'சூரியவம்சம்' படம் வெளியாகி 25 ஆண்டுகளாகிறது.

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்தப் படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். தந்தை எத்தனைதான் தன்னை வெறுத்தாலும் முக்கியத்துவம் தரவில்லை என்றாலும் தந்தைக்கு தன் இதயத்தில் உயர்ந்த ஒர் சிம்மாசனம் அமைத்து வைத்திருக்கும் உயர்ந்த மனத்து மகனாக சரத்குமார் உணர்ச்சித் ததும்ப தன் நடிப்பில் அசத்தியிருப்பார்.

இப்படத்தில் தந்தை சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும் மகன் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானியும் நடித்திருப்பார்கள். இயக்குநர் மணிவண்ணன், மகன் கதாபாத்திரத்தில் வரும் சரத்குமாருடன் காமெடி, செண்டிமெண்ட் என பிரமாதப்படுத்தியிருப்பார். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில், வெளியான இப்படம் வெளியாகி 27/06/2022 அன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இந்தநிலையில், படத்தின் நாயகனான நடிகர் சரத்குமார் தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில், "இயக்குநர், விக்ரமன் இயக்கத்தில் ஆர்.பி. செளத்ரி தயாரித்துள்ள இந்த சூப்பர் ஹிட் படத்தில் வேலை செய்த நினைவுகளை மீண்டும் திரும்பி பார்ப்பது மகிழ்ச்சியான ஒன்று. இன்று வரைக்குமே இது ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் தியேட்டரில் ஓடி அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்தார்கள் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது. ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரித்து கொள்கிறேன். ஊக்குவித்த அனைவரையும் மறக்கமாட்டேன் மற்றும் இது போல இன்னொரு படம் நடிக்க கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்'' என நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் சரத்குமார்.

சரத்குமார் நெகிழ்ந்து குறிப்பிட்டது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இன்றும்கூட அந்தப் படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் போதும் குடும்பமே உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும் படமாக எவர் கிரீன் ஃப்ல்ம் என்று போற்றத்தக்க வகையில் உள்ளது.

படத்தில் அத்தனை காட்சிகளும் ஆகச்சிறந்தவை என்றாலும், தன் தந்தை சக்திவேல் கவுண்டரை நினைத்து உருகி, மருகி, சின்ராசு பேசும் வசனம் தந்தையர் தினத்தன்று எல்லோரின் வாட்ஸ்அப் ஸ்டேடஸிலும் நிரம்பி வழிந்தது. 'உளி விழும்போது வலின்னு அழுத எந்தக் கல்லும் சிலையாக முடியாது. ஏர் உழும்போது கஷ்டம் நினைத்த எந்த நிலமும் விளைஞ்சு நிக்காது. அது மாதிரிதான் அப்பா கோவப்பட்றதையும், திட்றதையும் தப்பு நெனைக்கிற எந்த புள்ளையும் முன்னுக்கு வர முடியாது' என அவர் பேசும் அந்த வசனமும் காட்சியும் ஆகச் சிறந்ததில் ஆகச் சிறந்தது என்பது மிகையல்ல.

எனவே, "இதுபோல இன்னொரு படம் நடிக்கக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று சாத்குமார் குறிப்பிட்டது உண்மையில் வரவேற்கத்தக்கதும் கவனிக்கத்தக்கதுமாகும்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself