கேள்வி ஞானமே என் இசைக்கு மெருகேற்றியது - பாடகி பி. லீலா
பாடகி பி. லீலா பிந்த தினம் மே 19.
பி. லீலா கேரள மாநிலம் பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது கடைசி மகளாக பிறந்தார்.
இது செய்தியின் கரு....
தென்னிந்திய சினிமா உலகில் 25 ஆண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தவர். இனிமையின் மறுபெயர். தமிழ்த் திரைப்படத்தின் முன்னோடிப் பின்னணிப் பாடகி. பெரும் பெயர்களான எம்.எஸ், எம்.எல்.வி., டி.கே.பட்டம்மாள் இவர்கள் காலத்தில் பாடியவர்.
1947-48 வாக்கில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இவர் குரலைக் கேட்டிருக்கலாம்.'நீயே துணை ஈஸ்வரி' (அன்னையின் ஆணை), 'எனையாளும் மேரி மாதா' (மிஸ்ஸியம்மா), 'காத்திருப்பான் கமலக்கண்ணன்' (உத்தமபுத்திரன்), 'நீதானா என்னை அழைத்தது' (மாயா பஜார், கண்டசாலாவுடன்), 'தாழையாம்பூ முடிச்சு' (டி.எம்.எஸ். உடன் ), 'ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே' (லவகுசா, பி. சுசீலாவுடன்), 'கண்ணும் கண்ணும் கலந்து' (ஜிக்கி, பி. லீலா), 'கொஞ்சும் சலங்கை ஒலிகேட்டு' (கொஞ்சும் சலங்கை)...
இளையராஜா இசையமைப்பில் 'கற்பூர முல்லை' படத்தில் ஸ்ரீவித்யாவிற்காகப் பாடியது என்று சொல்லிக்கொண்டே போகலாம் இவரின் பாடல்களை. அத்தனையும் இனிமையானவை.சென்னை பரங்கிமலையிலுள்ள ராணுவக் குடியிருப்பில் இன்று தன் சகோதரி மகன்களுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தன் குடும்ப வாழ்வைப்பற்றிப் பேச மென்மையாக மறுத்துவிடுகிறார்.
இப்போ இந்த செய்தியில ஒரு மாற்றம் மண்னை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு அழியாத பாடல்களை விட்டுச் சென்ற பி.லீலா தற்போது இருந்தால்.....ஒரு சின்ன கற்பனை பேட்டி...
நான் பணியாற்றும் நிறுவனத்திற்காக அவரை பேட்டி எடுக்க போறேன்...வாங்க என்ன சொல்றாங்க அப்படின்னு பார்ப்போம்...
நிருபர் - மேடம் உங்கள் பெற்றோர்களும் சொந்த ஊரும் பற்றி...
பாடகி பி. லீலா - என் சொந்த ஊர் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர். நான் 1934 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி பிறந்தேன். என் அப்பா வி.கே. குஞ்ஞன்மேனன் எர்ணாகுளத்தில் ராமவரம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறந்த நடிகராகவும் விளங்கியுள்ளார். என் பெற்றோர்களுக்கு மொத்தம் மூன்று பெண்கள். நான்தான் கடைசிப் பெண். சகோதரர்கள் கிடையாது.
நிருபர் - அது சரி மேடம் கர்நாடக சங்கீதத்தில் உங்களுக்கு ஈடுபாடு வரக்காரணம்.
பாடகி பி. லீலா - என் அப்பாவிற்கு இசையில் அதிக ஈடுபாடு உண்டு. எங்கள் வீட்டில் என் சகோதரிகள் எல்லோரும் நன்றாகப் பாடுவார்கள். என் அப்பாவின் ஆர்வத்தால்தான் நான் பாட்டுக்கற்றுக்கொண்டேன். டி.வி. கோபாலனின் சித்தப்பா திரிபுவனம் மணிபாகவதர் என் குரு. அவரிடம் நான் சங்கீதம் கற்றுக்கொண்டேன். அதுபோல் பத்தமடை கிருஷ்ணய்யரிடம் பாட்டு கற்றுக்கொண்டேன். பல வித்வான்களின் பாடல்களைக் கேட்பதன் மூலமும் கற்றுக்கொண்டுள்ளேன்.
நிருபர் - ஓ அப்படியா... மெட்ராஸ்க்கு( இப்ப தானே சென்னை ) வந்தது எப்படி மேடம்?
பாடகி பி. லீலா - எங்கள் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் அடிக்கடி என் அப்பாவிடம் "உங்கள் மகளுக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. சங்கீதமும் நன்றாக வருகிறது. நீங்கள் மெட்ராஸ்க்கு போங்க. அங்குதான் கர்நாடக சங்கீத வித்வான்களும், மேதைகளும் நிறைய பேர் இருக்கிறார்கள். அது சங்கீதம் கற்றுக்கொள்வதற்கு ஏற்ற இடம்" என்று சொல்வாராம். அப்பாவும் என்னை எப்படியாவது சங்கீதத்தில் பெரிய அளவில் கொண்டு வரவேண்டும் என்கிற ஆசையில், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு முதன்முதலாக என்னை அழைத்துக் கொண்டு மெட்ரைாஸ்க்கு வந்தார். நானும் அப்பாவும் அப்போது மயிலாப்பூரில் தங்கினோம். அம்மாவும் சகோதரிகளும் கேரளாவில் இருந்தனர்..
நிருபர் - இது தான் உங்களுக்கு டர்னிங் பாயிண்ட் போல மேடம்... அப்படின்னா ராமபாகவதரின் அழைப்பு எப்படி வந்தது.
பாடகி பி. லீலா - வடக்கஞ்சேரி ராமபாகவதர் அப்பாவிற்கு ரொம்ப வேண்டியவர். அவர் கேரளாவிற்கு வரும்போதெல்லாம் அப்பாவிடம் "உங்க பொண்ணு நன்றாகப் பாடுகிறாள். அவளைச் சென்னைக்கு அழைத்து வாருங்கள். அங்கு அவளுக்கு நான் கர்நாடக சங்கீதம் கற்றுத் தருகிறேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்பாவும் சென்னையில் முதன்முதலாக ராமபாகவதர் வீட்டிற்குத் தான் என்னை அழைத்துச் சென்றார். அவர் வீட்டில் நாங்கள் சுமார் 2 வருடம் தங்கினோம். குருகுலவாச முறையில் எனக்குச் சங்கீதத்தைச் சொல்லிக் கொடுத்தார். 1944ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.
நான் மெட்ராஸ்க்கு வந்த பிறகுதான் பல இசைக்கலைஞர்கள், குறிப்பாக, சொல்லணும்னா அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எஸ். ராமநாதன், ஜி.என்.பி, செம்பை என்று பல வித்வான்களின் இசையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தக் கேள்வி ஞானமே என் இசைக்கு மெருகேற்றியது.
என்னை முதன்முதலாகப் பாடவைத்தது துர்காபாய் தேஷ்முக் அம்மையார்தான். அதன் பிறகு நான் பல இடங்களில் கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.
நான் அப்போது கொலம்பியா ரிக்கார்டிங் கம்பெனியில் ஆர்டிஸ்ட்டாக இருந்தேன். அந்த நிறுவனத்திற்காகப் பல பாடல்கள் பாடியுள்ளேன். இன்றும் என்னுடைய நாராயணியம் பலரால் விரும்பிக் கேட்கப்படுகிறது. 'கொலம்பியா'வில் கணபதி ராம ஐயர் என்பவர் நிர்வாகியாக இருந்தார். புதிய பெண்குரல் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த அவருக்கு என் குரல் பிடித்துப்போயிற்று. 1944-ல் சென்னைக்கு வந்த நான் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கர்நாடக இசையைப் பல இடங்களில் பாடியிருக்கிறேன். அதுதான் என்னைப் பின்னாளில் சினிமாவுக்கு இட்டுச் சென்றது.
நிருபர் -நீங்கள் தானே முதல் பின்னணிப் பாடகர் மேடம்...
1947ம் ஆண்டு நான் சினிமாவில் பாட ஆரம்பித்தேன். பின்னணி என்றால் என்னவென்று எனக்கு அப்போது தெரியாது. நான் கொலம்பியா ரிக்கார் டிங்கில் பாடல்கள் பாடி அதிகப் பிரபலமான நேரத்தில் என்னை 'கங்கணம்' படத்தில் பாடுவதற்குச் சிபாரிசு செய்தார்கள். என் முதல் பாட்டு 'ஸ்ரீ வரலட்சுமி' என்கிற துதிப்பாடல். பத்மநாப சாஸ்திரி இசையமைத்திருந்தார். நடிப்பவர்களே பாடிய காலத்தில் முதன்முதலாக நடிப்பவர் களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தது நான்தான் என்று சொல்லலாம்..தொடர்ந்து பத்மநாபசாஸ்திரியின் இரண்டு படங்களுக்குப் பாடினேன். அதற்குப் பிறகு சி.ஆர். சுப்பராயன் என்னைக் கன்னடப் படத்தில் பாடவைத்தார். தொடர்ந்து தெலுங்கில் கண்டசாலா என்னைப் பாடவைத்தார். சுமார் 25 வருடங்கள் நான் சினிமாவில் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருந்தேன்.
தென்னிந்திய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று மொத்தம் 5000 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடியிருப்பேன் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் நாங்கள் எண்ணிக்கை எல்லாம் வைத்துக்கொண்டதில்லை. தவிர ஒரே ஒரு வங்காளப் படத்தில் பாடியுள்ளேன்.
அநேகமாக அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய பின்னணிப் பாடகர்கள் அனைவருடனும் பாடியிருக்கிறேன். முக்கியமாகத் தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம். செளந்தரராஜன், டி.ஆர். மகாலிங்கம் ஆகியோருடன் பாடியிருக்கிறேன். எம்.கே. தியாகராஜ பாகவதர் சொந்தமாகத் தயாரித்த படத்தில் என்னைப் பாட அழைத்தது இன்றும் என் நினைவில் நிற்கிறது. படத்தின் பெயர் அமரகவி என்று நினைக்கிறேன். அதே போல் சுசிலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜமுனாராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி என்று பலருடன் பாடியுள்ளேன்.
சாவித்திரிக்கு நான் தெலுங்கிலும், தமிழிலும் நிறையப் பாடியிருக்கிறேன். அதுபோல் ஸ்ரீரஞ்சனி, பத்மினி இவர் களுக்கும் நிறையப் பாடியிருக்கிறேன். அன்றைய காலத்தில் அத்தனை நடிகை களுமே என்னிடம் அன்புடனும், மரியாதையுடனும் பழகுவார்கள். ஏதாவது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேரிட்டால்கூட ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்வோம். எங்களுக்குள் அப்படி ஒரு தோழமை இருந்தது.
நிருபர் - அத்தனை பாடல்கள் பாடியிருந்தாலும் உங்களுக்கு பிடித்த பாடல் எது மேடம்?
பாடகி பி. லீலா - நான் பாடிய பாடல்கள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, நானும் சுசிலாவும் லவகுசா படத்தில் பாடிய 'ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே' பாடல் மற்றும் நானும் எம்.எல். வசந்தகுமாரியுடன் மாயாபஜார் படத்தில் பாடிய 'எல்லாம் இன்பமயம்' இவற்றைச் சொல்லலாம். இந்தப் பாடல் சிம்மேந்திர மத்தியமத்தில் தொடங்கி ஹிந்தோளம், தர்பார், மோகனம் என்று போகும். நானும் எம்.எல்.வி.யும் போட்டி போட்டுக்கொண்டு பாடுவதுபோல் இருக்கும். இப்படிப் பல பாடல்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.
நிருபர் - அதெல்லாம் சரி மேடம் நீங்களோ மலையாளம் நல்லா தமிழில் பாடிறீங்களே அது எப்படி?
பாடகி பி. லீலா - நான் சென்னைக்கு வந்தபோது எனக்கு மலையாளம் தான் தெரியும்.தமிழ் சுத்தமா தெரியாது பொதுவாக நான் பாடும்போது தமிழ், தெலுங்கு எதுவாக இருந்தாலும் அவற்றை மலையாளத்தில் எழுதிக்கொண்டு ஒருமுறைக்கு இருமுறை பாடிப் பயிற்சி செய்வேன். வார்த்தை உச்சரிப்பில் அதிகம் கவனம் செலுத்துவேன். தவிர, சினிமாவில் பாட ஆரம்பித்தவுடனேயே தமிழ், தெலுங்கு மொழிகளைப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் வீட்டில் ஆசிரியரை அமர்த்திக் கற்றுக்கொண்டேன்.
அது மட்டுமல்ல ஒரு தெலுங்கு படத்துக்கு இசையமைத்தேன்...'சின்னாரி பாப்லு' என்கிற தெலுங்குப் படம் என்று நினைக்கிறேன்.இந்தப் படம் 1968ஆம் வருடத்தில் முற்றிலும் பெண்களாலேயே தயாரிக்கப்பட்ட படம். அதற்குப் பிறகு நான் எந்தப் படத்திற்கும் இசையமைக்கவில்லை.இது தற்பெருமைக்கு சொல்லவில்லை தெரிந்து கொள்ளட்டுமே அப்படின்னு சொன்னேன்.
அப்பெல்லாம் நாங்கள் பாடும் காலத்தில் முதலில் எங்களுக்கு பாடலைச் சொல்லி கொடுப்பார்கள். இரண்டு நாள் ஒத்திகை நடக்கும். ரிகர்சல் ஆனவுடன் இசைக்கருவிகளுடன் பாடச் சொல்வார்கள். எல்லாம் நன்றாக வரவேண்டும். கடைசியில்தான் வாகினியிலேயோ, விஜயாவிலேயோ பதிவார்கள். ஒரு பாடலைப் பாடிப் பதிவுசெய்ய ஒரு வாரம் கூட ஆகும்.
ஆனா இன்னிக்கு ஒரே நாளில் 8, 9 பாடல்கள் ரிகார்ட் செய்வதாகக் கேள்விப்படுகிறேன். இதெல்லாம் காலத்தின் மாற்றங்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது வரி, வரியாகப் பாடுகிறார்கள். யார் பாடுகிறார்கள் என்றே தெரியவில்லை. எங்கள் காலத்தில் அந்த தளத்தில் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்.இங்கு பாடல் ரிகார்டிங் நடக்கும். நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதைக் குற்றம் சொல்ல முடியாது.
எம்எல். வசந்தகுமாரி, டி.கே. பட்டம்மாள், எம்.எஸ் அம்மா என்ற மூன்று ஜம்பாவான்கள் சினிமாவில் பாடிய காலத்தில் நானும் பாடினேன் என்று நினைக்கும் போதே எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் சங்கீத உலகில் பெயரும் புகழும் பெற்றவர்கள். எம்.எல். வசந்தகுமாரியின் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் ஜி.என்.பி.யின் சிஷ்யை. ஜி.என்.பி.யின் குரல் வளமும் எனக்கு படிக்கும். அதுபோல் எம்.எஸ். அம்மா, டி.கே. பட்டம்மாள் எல்லோருமே நன்கு பழகுவார்கள்.
நிருபர் - உங்களோடு பேசியது மிக்க மகிழ்ச்சி இன்னு ஒரே கேள்வி தான் மேடம் நீங்கள் கடைசியாகப் பாடிய திரைப்படப் பாடல் எது தெரியுமா,
பாடகி பி. லீலா - கற்பூரமுல்லை என்ற படத்தில் ஸ்ரீவித்யா விற்காகப் பாடினேன். அதற்குப்பிறகு நான் சினிமாவில் பாடவில்லை. கிட்டத்தட்ட 22, 33 வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. இப்போது புதுப்புது பாடகர்கள் நிறைய வந்துவிட்டார்கள். நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன.
சரி மேடம் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். இனி ஏதாவது சொல்லணும் என்றா்ல நீங்களே சொல்லுங்கள்..
அந்தக் காலத்தில் இத்தனை விருதுகளோ, பட்டங்களோ கிடையாது. ஆனால் என்னுடைய 13-வது வயதில் நான் முதன்முதலாக ராகம், தாளம், பல்லவி பாடியதற்காகத் தங்கப்பதக்கம் பெற்றேன். அப்புறம் சின்னப் பரிசுகளும், பட்டங்களும் கிடைத்தன. 1994ம் வருடம் என்று நினைக்கிறேன், தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றேன். எனக்கு அன்று இந்தப் பட்டத்தை வழங்கியது ஜெயலலிதாதான். மேடையில் ஜெயலலிதா என்னிடம் "உங்களுக்கு இப்படிப்பட்ட விருதுகள் எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். இத்தனை காலம் கடந்து உங்களுக்கு வழங்குகிறோம். இருந்தாலும் இந்த விருதை என் கையால் வழங்குவதில் பெருமை கொள்கிறேன்" என்று சொன்னார்.கானமணி, கானகோகிலா, கலாரத்னம், கானவர்ஷினி என்று ஏகப்பட்ட பட்டங்கள் கொடுத்திருக்கிறார்கள். எல்லாம் இப்போது நினைவுக்கு வரவில்லை. முதன்முதலாகக் கேரள அரசாங்கத்தின் விருது 1968ல் கிடைத்தது. 1983ல் கிளாசிக்கல் மியூசிக் விருதினை கேரள அரசு அளித்தது. நிறைய பக்திப்பாடல்கள் பாடியிருக்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நாராயணீயம், ஹரி நாமகீர்த்தனம், ஐயப்ப சுப்ரபாதம், குருவாயூர் சுப்ரபாதம், ஸ்ரீ மூகாம்பிகை சுப்ரபாதம், ஐயப்பன் பாடல்கள் என்று நிறையப் பாடியிருக்கிறேன்.
இன்று நிறையப் பாடகர்கள் வருகிறார்கள். நன்றாகப் பாடுகிறார்கள். தொலைக் காட்சியில் சங்கீத நிகழ்ச்சிகள் நிறைய ஏற்பாடு செய்கிறார்கள். புதுப்புதுக் குரல்களை அறிமுகப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் காலத்திற்கேற்ற மாற்றங்கள் தாம். இன்றைய இளம் பாடகர்களுக்கு நான் சொல்வதெல்லாம் "போட்டி போடுங்கள், ஆனால் பொறாமை கொள்ளாதீர்கள்" என்பதே.
எனக்கு உயிர், மூச்சு எல்லாம் இசைதான். நான் இசைக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்றும் நிறையக் கச்சேரிகள் செய்கிறேன். நிறைய பஜனைகளும், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடத்திக்கொண்டிருக்கிறேன். இன்று உங்கள் முன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் காரணம் என் அப்பாதான். அவர்தான் எனக்கு எல்லாம். அவர் இல்லை என்றால் இன்று நான் இல்லை. என் புகழ், பொருள் எல்லாம் அவர் கொடுத்ததுதான்.
கற்பனை முடித்து நிஜத்திற்கு வருவோம்...
சென்னை டிபென்ஸ் காலனியில் தனது உறவினர்கள் வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்த பி.லீலா தனது 76 ஆவது வயதில் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் இறந்த பின்னர் மத்திய அரசு 2006ல் பத்ம பூசன் விருதை அளித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu