கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம்...
கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம்
கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் ஏப்ரல் 18 முதல் முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், பகல் 2 மணி முதல் வைரமுத்து யூ டியூப் வலைத்தளத்திலும் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. நாட்படு தேறல் தொடரின் நான்காம் பாடலாக 'தமிழ் ஈழக் காற்றே' என்ற பாடல் நேற்று வெளியான. இசை : இசை அரசன், குரல் : சத்யபிரகாஷ், இயக்கம் : ஜீவா முகுந்தன்.
பாடல் வரிகள் :
தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழிவந்து வீசு – எங்கள்
மண்ணின் சுகம்கண்டு பேசு
*
உயிரைக் கொடுத்த அன்னை
கயிறாய்க் கிடப்பாளோ?
எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய்க் கிடப்பாரோ?
நல்லூர் முருகன் கோயில்மணியில்
நல்லசேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்
உயிரும் உடலும் நலமோ?
ஓடிய வீதிகள் சுகமா – எங்கள்
ஒருதலைக் காதலி சுகமா?
பாடிய பள்ளிகள் சுகமா? – உடன்
படித்த அணில்கள் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
*
முல்லைத் தீவின் கதறல்
மூச்சில் வலிக்கிறதே!
நந்திக் கடலின் ஓலம்
நரம்பை அறுக்கிறதே!
பிள்ளைக் கறிகள் சமைத்து முடித்த
தீயும் மிச்சம் உள்ளதோ?
எங்கள் ஊரை எரித்து மீந்த
சாம்பல் சாட்சி உள்ளதோ?
வன்னிக் காடுகள் சுகமா? – எங்கள்
வல்வெட்டித்துறையும் சுகமா?
காய்ந்த கண்ணீர் சுகமா? – இன்னும்
காயாத குருதியும் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu