யுனிகார்ன் கிளப்பில் சேரும் 6 புதிய நிறுவனங்கள்: ஜெட் வேகத்தில் இந்திய தொழில் நுட்பத்துறை
யுனிகார்ன் நிறுவன லோகோ
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதலபாதாளத்திற்கு சென்ற இந்திய பொருளாதாரம், தற்போது சரிவிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது. அரசின் தொடர் நடவடிக்கைகளால் பல இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி பல புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மக்களின் இன்டர்நெட் பயன்பாடு ஆகியவையாகும்.
2020-21 பிப்ரவரியில் பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பின்படி 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்) 4 லட்சத்து 70 ஆயிரம் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. 2020 ம் ஆண்டில் ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 11.8 பில்லியன் டாலராக இருந்தது. கோவிட் 19 காரணமாக இன்னும் பொருளாதாரத்திலிருந்து மீள முடியாத நிலையில், இந்தியாவில் யுனிகார்ன் கிளப்பில் 1 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள 6 நிறுவனங்கள் சேர்ந்துள்ளது. மெசேஜிங் போட்ஸ் ஸ்டார்ட்அப் குப்ஷப் 1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை திரட்டியது. பார்மசி ஏபிஐ ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடட் 1.5 பில்லியன் டாலரையும், டெவலப்பர் மொல்லா டெக் 2.1 பில்லியன் டாலரையும், சமூக வர்த்தக தொடக்க மீஷோ இன்க் 2.1 பில்லியன் டாலரையும், ஃபின்டெக் வழங்குனர் கிரெட் 2.2 பில்லியன் டாலரையும் எட்டியது.
2014 ம் ஆண்டில் இந்தியாவில் 29 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2015 மற்றும் 2018 க்குப் பிறகு அதிவேகமாக அதிகரிக்கத் தொடங்கி, தற்போது 39 ஆயிரமாக உள்ளது. இந்த எண்ணிக்கை சர்வதேச அளவில் 3 வது இடமாகும். சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி இதில் 38 நிறுவனங்களை யுனிகார்ன் நிறுவனங்கள் (1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள நிறுவனங்கள்) பட்டியலில் சேர்த்துள்ளது. 2020 ல் கொரோனா பாதிப்புக்கு இடையிலும் 12 புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பேடிஎம் மற்றும் பிஜு ஆகிய நிறுவனங்கள் அதிக பங்களிப்பு செலுத்தியுள்ளன என்று பிரீக்கின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu