ஜாப் ஒர்க்குகளுக்கு பணம் செலுத்தாவிட்டால் கூடுதல் வரி..!

ஜாப் ஒர்க்குகளுக்கு பணம்  செலுத்தாவிட்டால் கூடுதல் வரி..!
X

வரி விதிப்பு (கோப்பு படம்)

‘ஜாப் ஒர்க்’ பணிகளுக்கு பணம் செலுத்த காலதாமதம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி கூடுதல் வருமான வரி விதிக்கப்படும்.

திருத்தியமைக்கப்பட்ட எம்எஸ்எம்இ சட்டம், 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜாப் ஒர்க் பணிகளுக்கு பணம் செலுத்த காலதாமதம் செய்யும் நிறுவனங்கள் கூடுதல் வருமானவரி செலுத்த நேரிடும்.

நாட்டின் மொத்த தொழில் வளர்ச்சியில் எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் இத்தகைய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை ‘ஜாப் ஒர்க்’ அடிப்படையில் பணி ஆணை பெற்று தயார் செய்து அளித்து வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு குறித்த காலத்தில் பெரிய மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பணத்தை வழங்குவதில்லை. இதனால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் எம்எஸ்எம்இ சட்டம் ( உதயம் திட்டம் ) 2006-ம் ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் இந்த சட்டத்தை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, பெரிய நிறுவனங்கள் 15 நாட்களுக்குள் பணத்தை குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்தம் செய்திருந்தால் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில் காலதாமதம் செய்யப்படும் காலத்திற்கு தற்போதுள்ள வங்கி வட்டி வகிதத்தில் இருந்து ( 6.75 சதவீதம் ) மூன்று மடங்கு வட்டியுடன் செலுத்த வேண்டும். தொழில் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் இந்த சட்டத்தை பலர் கடைபிடிப்பதில்லை. மறு புறம் உதயம் திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் சென்று விடும் என்பதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களும் கெடுபிடி காட்டுவதில்லை.

இத்தகைய சூழலில் திருத்தியமைக்கப்பட்ட சட்டம் 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மார்ச் 31-க்குள் ஜாப் ஒர்க் பணிகளுக்கு பணம் செலுத்தாத நிறுவனங்கள் கூடுதல் வருமான வரி செலுத்த நேரிடும். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு குறு, சிறு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!