புதிய மொபைல் பேங்கிங் ரூல்ஸ்..! இனி இப்படித்தான் பணம் அனுப்பனும்..!

புதிய மொபைல் பேங்கிங் ரூல்ஸ்..!  இனி இப்படித்தான் பணம் அனுப்பனும்..!
X
மொபைல் பேங்கிங் மூலம் அக்கவுண்ட் நம்பர், ஐ.எப்.எஸ்.சி., கோடு இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

2024 பிப்ரவரி 1 முதல்.. ஐஎம்பிஎஸ் (IMPS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உடனடி பணம் செலுத்தும் சேவையில் (Immediate Payment Service) புதிய மாற்றமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது வங்கி கணக்குகளுக்கு இடையேயான பண பரிமாற்றத்தை இன்னும் வசதியாக மாற்றியுள்ளது.

என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) கூற்றுப்படி, புதிய ஐஎம்பிஎஸ் விதியின் கீழ், ஒரு வாடிக்கையாளரின் பேங்க் அக்கவுண்ட் நம்பர் (Bank Account Number) அல்லது ஐஎஃப்எஸ்சி கோட் (IFSC Code) இல்லாமலேயே அவருக்கு ரூ.5 லட்சம் வரையிலாக பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.

புதிய ஐஎம்பிஎஸ் விதியின் கீழ், பெறுநரின் மொபைல் எண் மற்றும் அவர்களின் வங்கியின் பெயரை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை செய்யலாம். இதன்கீழ் பணப்பரிமாற்ற செயல்முறையை நெறிப்படுத்துவது மட்டுமின்றி, விரைவாகவும் நடக்கும். கூடவே வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட் நம்பர் மற்றும் இதர தகவல்களை உள்ளிடும் போது ஏற்படும் தவறுகள் மற்றும் அதன் வழியிலான சிக்கல்களையும் தடுக்க முடியும்.

ஒருவேளை நெறிப்படுத்தப்பட்ட ஐஎம்பிஎஸ் சேவையின் கீழ், அக்கவுண்ட் நம்பர் இல்லாமல், ஐஎஃப்எஸ்சி கோட் இல்லாமல், வெறுமனே ஒருவரின் மொபைல் நம்பர் மற்றும் பேங்க் பெயரை வைத்து பணம் அனுப்புவது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் இருப்பின்.. கீழ்வரும் எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்:

01. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மொபைல் பேங்கிங் ஆப்பிற்கு (Mobile Banking App) செல்லவும்.

02. பின்னர் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் (Fund Transfer) பிரிவை கண்டுபிடித்து, அதை கிளிக் செய்யவும்.

03. நிதி பரிமாற்றத்திற்கான விருப்பமாக ஐஎம்பிஎஸ் (IMPS) என்பதை தேர்வு செய்யவும்.

04. இப்போது பெறுநரின் மொபைல் எண்ணை கொடுத்து, அவரின் வங்கி பெயரைத் தேர்ந்தெடுக்கவும் (அதாவது முன்னர் இருந்தது போல அக்கவுண்ட் நம்பர் அல்லது ஐஎஃப்எஸ்சி விவரங்கள் எதையும் உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது)

05. இப்போது ரூ.5 லட்சத்திற்குள் நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்பும் தொகையை குறிப்பிடவும்.

06. தேவையான விவரங்களை அளித்த பிறகு கன்ஃபிர்ம் (Confirm) என்பதை கிளிக் செய்யவும்.

07. இப்போது உங்களுக்கு ஒரு ஒடிபி (OTP - One Time Password) அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி, நீங்கள் பணம் அனுப்ப விரும்பிய குறிப்பிட்ட நபருக்கு பணப்பரிவர்த்தனையை செய்து முடிக்கவும்.

நீங்கள் செய்த பணப்பரிவர்த்தனை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு நிகழ்நேர பயனாளிகளின் சரிபார்ப்பு (Real-time beneficiary validation) செய்யப்படும், இது தவறான பணபரிமாற்றத்திற்கான (Incorrect transfers) வாய்ப்புகளை மேலும் குறைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக, 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களிலும் அணுக கிடைக்கும் ஐஎம்பிஎஸ் சேவையானது தற்போது இன்னும் எளிமையாகியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஐஎம்பிஎஸ் சேவையானது பணம் அனுப்பும் வங்கிகளுடன், மெம்பர் பேங்க் பெயர்களின் மேப்பிங்கை (Mapping of member bank names) டீஃபால்ட் எம்எம்ஐடி (Default MMID - Mobile Money Identification Number) உடன் பராமரிக்கும். மேலும் இந்த புதிய நிதி பரிமாற்ற முறையை இன்னும் எளிதாக்குவதற்கு தேவையான யூஸர் இன்டர்ஃபேஸ் (UI) / யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் (UX) மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!