ஆன்லைன் வர்த்தகத்தால் ஆவது என்னென்ன..? நீங்களும் தெரிஞ்சிக்கங்க..!

ஆன்லைன் வர்த்தகத்தால் ஆவது என்னென்ன..? நீங்களும் தெரிஞ்சிக்கங்க..!
X

ஆன்லைன் வர்த்தகம் -கோப்பு படம் 

வணிக போராட்டங்களை எதிர்கொள்ள சிறு வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் தயாரானால் மட்டுமே தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சுதந்திர இந்தியாவில் குதிரை வண்டிகளே மக்களின் பிரதான போக்குவரத்து வாகனமாக இருந்தது. சைக்கிள் ரிக்‌ஷா வந்து குதிரை வண்டிகளை வீழ்த்தியது. அடுத்து ஆட்டோ வந்து சைக்கிள் ரிக்‌ஷாக்களை வீழ்த்தின. அடுத்து மினி பஸ் வந்து ஆட்டோக்களை வீழ்த்தின. தற்போது இலவச பஸ் வந்து மினி பஸ்களை வீழ்த்தி விட்டன. ஆட்டோக்கள் இப்போதும் உயிர் வாழ்ந்தாலும், மினி பஸ்களும், சைக்கிள் ரிக்‌ஷாக்களும், குதிரை வண்டிகளும் பழங்கால சின்னமாகிப்போனது.

போன் பேசுவதற்கு டிரங்க்கால் புக் செய்து பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அடுத்து எஸ்.டி.டி., பூத்துகள் வந்தன. எஸ்.டி.டி., பூத்துகள் வைத்திருப்பவர்கள் ஒரு கட்டத்தில் சமூக அந்தஸ்து பெற்றவர்களாகவே மாறியிருந்தனர். மொபைல் வந்து எஸ்.டி.டி., பூத்துகளை வீழ்த்தி விட்டது.

சினிமா வந்து நாடகங்களை வீழ்த்தியது. ஆன்ட்ராய்டுகள் வந்து சினிமா தியேட்டர்களை வீழ்த்தி விட்டது. இதே போல் தான் ஒவ்வொரு துறைகளும் மாற்றங்களை கண்டு வருகின்றன. இன்று தினசரி பத்திரிக்கைகளே ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. தனியாக ஆன்லைன் சேனல்கள் வந்து விட்டன. தமிழகத்தில் குறிப்பிட்ட சில செய்தி சேனல்களில் தங்கள் விளம்பரம் வெளிவர ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே புக் செய்ய வேண்டிய அளவு மவுசு இருந்தது.

இப்போது ஆன்லைன் சேனல்கள் டிவி மீடியாக்களை அதாவது விஷூவல் மீடியாக்களை அடித்து துவம்சம் செய்து விட்டன. விஷூவல் மீடியாக்களே இன்று ஆன்லைனை நம்பி வாழுகின்றன. தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்டேட் ஆகாத உலகில் பல பாரம்பரிய பத்திரிக்கைகள் கூட மூடப்பட்டு வரும் செய்திகளை நாம் ஆன்லைனில் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

ஒட்டு மொத்த கல்வித்துறையும் இன்று ஆன்லைனுக்கு மாறி விட்டது. நமது வாழ்வியலே ஆன்லைனை சுற்றித்தான் அமைந்துள்ளது. ஆக மாற்றம் ஒன்றே மாறாதது. ‘‘சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரினமே அதிக நாள் உயிர் வாழும்’’ இது எட்டாம் வகுப்பு பாடத்திலேயே சொல்லிக் கொடுக்கப்பட்ட அறிவியல் தியரி.

உள்ளூர் வணிகர்களை ஆதரியுங்கள்

இப்போது உள்ளூர் வணிகர்களை ஆதரியுங்கள். ஆன்லைனில் ஷாப்பிங் செய்யாதீர்கள் என்ற கோஷம் வலுத்து வருகிறது. அமேசான், பிலிப்காட், மீசோ, மின்த்ரா, ஏஜியோ, நைகா, டாடாகிளிப் உள்ளிட்ட பல ஆன்லைன் நிறுவனங்கள் தங்களது எலக்ட்ரானிக், டிஜிட்டல் கட்டமைப்புகள் மூலம் வணிக வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்களது லாபத்தை மிகவும் குறைவாக வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்த நிறுவனங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்பவர்கள் யார்? இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள். அவர்கள் தான் இங்குள்ள சிறு வியாபாரிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பொருட்களை சப்ளை செய்கின்றனர். ஆக உற்பத்தியாளர்களும், மொத்த வியாபாரிகளும் இரு தரப்பிற்கும் தங்களது பொருட்களை கொடுத்து, தங்களது வணிகத்தை பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

தொழில்நுட்பம், வீடு தேடிக் கொண்டு போய் சேர்க்கும் சேவை, குறைந்த விலை போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்கின்றன. சிறு வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் எங்களை வாழ வையுங்கள். ஆன்லைனில் பொருட்களை வாங்காதீர்கள் என கோரிக்கை வைக்கின்றனர். அவர்கள் இந்த கோரிக்கையை தாங்கள் பொருட்கள் வாங்கும் மொத்த வியாபாரிகளிடமும், இந்தியாவில் உள்ள பெரிய உற்பத்தி நிறுவனங்களிடமும் அல்லவா வைக்க வேண்டும்.

இன்று உணவு வர்த்தகம் முழுக்க ஆன்லைன் ஆக மாறிப்போனது. சாதாரண பேரூராட்சி மற்றும் சிறு கிராமங்களில் இருக்கும் ஓட்டல்களில் கூட ஆன்லைன் உணவு வணிகம் நடக்கின்றன. ஆன்லைன் உணவு வணிகம் நடத்தும் இந்த சிறிய ஓட்டல்கள் மற்ற ஓட்டல்களின் வயிற்றில் அடிக்கின்றன என்று சொல்லலாமா? அல்லது அவர்கள் பெரும் தவறு செய்கிறார்கள் என சொல்லலாமா? தங்களை சுற்றிலும் உள்ள தொழில்நுட்பங்களையும், வணிக வாய்ப்புகளையும் திறம்பட கையாள வேண்டும்.

இவ்வளவு பரந்து விரிந்த வணிக உலகில், இன்னும் கை வண்டியில் பொருட்களை விற்கும் வியாபாரிகளும், சைக்கிள், டூ வீலரில் சென்று பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளும் இருக்கத்தானே செய்கின்றனர். இதுவும் ஒரு வகையான ஆன்லைன் வணிகம் தானே. இதனால் தான் அரசு இந்த விஷயத்தில் மொளனம் காக்கிறது. எப்போதுமே தொழில்நுட்ப வளர்ச்சியை தடுப்பது என்பது அரசாங்கத்தாலேயே முடியாத ஒரு காரியம். தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து பயணிப்பதும், அதன் எதிர்மறை தாக்கங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதும் மக்களின் கைகளில் தான் உள்ளது.

உள்ளூர் அரிசி வியாபாரி, வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைனில் வாங்குகிறார். ஆனால் அரிசி வாங்குபவர்கள் தங்களிடம் நேரடியாக வந்து வாங்க வேண்டும் என நினைக்கிறார். இன்றைய நிலையில் அதிகபட்சம் மூன்று நாள் கூட தாங்காத காய்கறிகள், பழங்கள் கூட ஆன்லைனில் விற்கப்படுகின்றன. இதே போல் தான் பல சிறு வியாபாரிகளும். பலசரக்கு வியாபாரிகளே தங்கள் வீட்டிற்கு தேவையான டிவி., மொபைல்களை ஆன்லைனில் தான் வாங்குகின்றனர்.

ஆக இதில் பெரும் சங்கடமான விஷயம். தங்களுக்கு மட்டும் நியாயம் வேண்டும். தங்களது தொழில் மட்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒவ்வொருவரும் நினைப்பது தான். இதில் ஒருவரை பாதுகாக்க அரசு மற்றொருவரை வீழ்த்த வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? அல்லது நாடு வளர வேண்டாம். தொழில்கள் வளர வேண்டாம். இப்போது தொழில் செய்பவர்கள் மட்டும் வாழட்டும். புதியவர்கள் எந்த தொழிலும் யாருக்கும் போட்டியாக செய்யக்கூடாது என அரசால் சொல்ல முடியுமா?

ஒரு தொழிலில் ஈடுபடுபவர்கள், அதில் வரும் சவால்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டு வணிக நிறுவனங்களை அனுமதிக்காதீர்கள் என்று சொல்வதற்கும் ஆன்லைன் வணிகத்தை அனுமதிக்காதீர்கள் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. வணிகர்களே... மாற வேண்டியது நீங்கள் தான். மேம்பட வேண்டியது நீங்கள் தான். உங்கள் போராட்டத்தை நீங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும். மக்களை துணைக்கு அழைப்பதில் நியாயமில்லை. மக்கள் தங்களுக்கு தரமான பொருட்களை குறைந்த விலையில், தங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து யார் கொடுத்தாலும் வாங்கத்தான் செய்வார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!