ஐடி நிறுவனத்தைத் துவங்கும் பாபா ராம்தேவ்..!
கடந்த வார இறுதியில் ரோல்டா இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தில், இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள் அதிக ஏலம் தொகைக்கு எடுத்ததாகப் புனேவை தளமாகக் கொண்ட அஷ்டான் பிராப்பர்டீஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களில் பதஞ்சலி ஆயுர்வேத் கூடுதல் தொகைக்குக் கைப்பற்றுவதாக முன்வந்துள்ளது மட்டும் அல்லாமல் நேரடியாக NCLT அமைப்பை நாடியுள்ளது. கமல் சிங் தலைமையிலான ரோல்டா இந்தியா ஒரு பாதுகாப்புத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனமாகும். 1989 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் மும்பை-யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஐடி, பிஸ்னஸ் இண்டலிஜென்ஸ், பிக்டேட்டா அனலிட்டிக்ஸ், ஜியோகிராபிக் டேட்டா மற்றும் இன்பர்மேஷன் அண்ட் இன்ஜினியரிங் பிரிவு சேவைகளை அளித்து வருகிறது. ரோல்டா இந்தியா ஜனவரி 2023 இல் திவாலானதாக அறிவித்து, திவால் செயல்முறைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
ரோல்டா இந்தியா யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (UBI) தலைமையிலான வங்கிகளுக்கு 7,100 கோடி ரூபாயும், சிட்டி குரூப் தலைமையில் பாதுகாப்பற்ற வெளிநாட்டுப் பத்திரதாரர்களுக்கு 6,699 கோடி ரூபாயை செலுத்த வேண்டும். இப்படி மொத்தம் 14,000 கோடி ரூபாய் கடனுடன் திவாலாகியுள்ளது. வங்கிகள் தரப்பில் நடத்தப்பட்ட ஏலத்தில் ரோல்டா இந்தியா நிறுவனத்தை அஷ்டான் பிராப்பர்டீஸ் சுமார் 760 கோடி ரூபாய் என்ற அளவில் தற்போதைய மதிப்பு (NPV) அடிப்படையில் வாங்க விண்ணப்பத்தை முன்வைத்த நிலையில், அதிக ஏல தொகைக்கு எடுத்ததாக வங்கிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த 760 கோடி ரூபாய் என்பது மொத்தக் கடனில் 6%க்கும் குறைவான அளவாகும். இந்த நிலையில் தான், இந்த வார தொடக்கத்தில் பதஞ்சலி ஆயுர்வேத் அதன் ஏலத்தைப் பரிசீலிக்கக் கடன் வழங்குபவர்களை வழிநடத்துமாறு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை பெஞ்சை அணுகியது. வியாழன் அன்று நடந்த விசாரணையில், ஆஷ்டான் பிராப்பர்டீஸின் ஆட்சேபனையைக் கேட்ட பிறகு, ஏல செயல்முறை முடிந்த பிறகு சலுகையைப் பரிசீலிக்கலாமா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை NLCT பெஞ்ச் கடனாளிகள் குழுவிடம் கொடுத்துள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத்-ன் பிட்டிங் தொகை 820 கோடி ரூபாய் முதல் 830 கோடி ரூபாயாக இருக்கும். இதுவரை கடன் வழங்குநர்கள் கையில் வைத்திருந்ததை விட இது மிகவும் சிறப்பான தொகையாக உள்ளது. மேலும் பதஞ்சலி மொத்த தொகையையும் பணமாகக் கொடுக்க முன் வந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu