கொலை வழக்கில் பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது

கொலை வழக்கில் பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது
X

ராக்கெட் ராஜா

பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்களில் சிக்கி தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்து ரவுடிகளின் அட்டகாசத்தை அடியோடு ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக காவல்துறையால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த குற்றவாளியான ராக்கெட் ராஜா திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டு படை என்ற கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அடிதடி, கொலை, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ராக்கெட் ராஜா மீது பல போலீஸ்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் வெளிநாடு தப்பி செல்ல முயன்றபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கடந்த 1993ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரபலமாக வலம் வந்தார். இவர் எங்கு சென்றாலும் உடன் பாதுகாப்பிற்காக கார்களில் பலர் செல்வார்கள். நெல்லை மாவட்டத்தில் நடந்த பல கலவரங்களில் முக்கிய குற்றவாளியாக இவர் இருக்கிறார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாமிதுரை தரப்பிற்கும், ராக்கெட் ராஜா தரப்பிற்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று ராக்கெட் ராஜா திட்டப்படி சாமிதுரை கொலை செய்யப்பட்டதாக வழக்கு உள்ளது.

எனவே இந்த வழக்கில் கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் ராக்கெட்டு ராஜாவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்து அவரும் பதுங்கி இருந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நாங்குநேரி டி.எஸ்.பி. சதுர்வேதி தலைமையிலான நெல்லை தனிப்படை போலீசார் ராக்கெட் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் வெளிநாடு தப்பி செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1990 கால கட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என பல்வேறு சம்பவங்களில் ராக்கெட் ராஜா ஈடுபட்டு வந்தார். 2017 ஆம் ஆண்டு காவல்துறை தன்னை என்கவுண்டரில் சுட்டு கொல்ல திட்டமிட்டிருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர். ராக்கெட் ராஜா சமீப காலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார்.

மேலும் தற்போது கர்நாடக சிறையில் இருக்கும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாருடன் இணைந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். குறிப்பாக ஆலங்குளம் பகுதியில் ஹரி நாடாருக்காக பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க செய்தார். குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராக பார்க்கப்பட்ட ராக்கெட் ராஜா நேரடியாக களத்தில் வந்து பிரசாரம் செய்த காரணத்தால் அத்தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் சுமார் 30000 வாக்குகள் பெற்றார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. மோசடி வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்ற நிலையில் ராக்கெட் ராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future