அதிகரிக்கும் கொரோனா:மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 100 பேருக்கு சோதனை செய்தால் அதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுபோல டெல்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு ஆழ்ந்த பரிசோதனை செய்ய வேண்டும். அவரைத் தனிமைப்படுத்துதல் அல்லது சரியான நேரத்தில் விரைவாக உரிய சிகிச்சையை அளிக்க வேண்டும்.
பரிசோதனையை அதிகப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடித்து அவர்களையும் தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய பிரிவினருக்கு அதை வேகப்படுத்த வேண்டும்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை விரைவாகக் கண்டறிய வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.
தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணித்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைக் கவனமாக மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைத் தீவிரப்படுத்தி, 70 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும். உள்ளூர் சூழலைக் கண்காணித்து, கொரோனா பரவல் நிலைக்கு ஏற்ப உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நகர அளவில் கட்டுப்பாடுகள், வார்டுகள் அளவில் கட்டுப்பாடுகள் தேவைக்கு ஏற்ப விதிக்கலாம்.
மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளேயும் போக்குவரத்தில் தடை ஏதும் இல்லை. தனிநபர்கள் மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பயணிக்கத் தடையில்லை. சரக்கு வாகனப் போக்குவரத்துக்கும் தடையில்லை.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் கொரோனா விதிகளைக் கடுமையாக பின்பற்ற மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம் பொறுப்பாக இருந்து நடவடிக்கை எடுத்து, அதைக் கண்காணிக்க வேண்டும்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகள், ஹோட்டல்கள், உயர்கல்வி நிறுவனங்கள், மெட்ரோ ரயில், பயணிகள் ரயில் போக்குவரத்து, ஷாப்பிங் மால், திரையரங்குகள், பூங்காக்கள், யோகா மையம், ரெஸ்டாரன்ட், கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தத் தடை ஏதும் இல்லை. இவ்வாறு மத்திய அரசு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu