கண்வலி பயிர் விவசாயிகளை ஏமாற்றி பித்தலாட்டம்: மூலனூர் விவசாயி கொந்தளிப்பு..!

கண்வலி பயிர் விவசாயிகளை ஏமாற்றி  பித்தலாட்டம்:   மூலனூர் விவசாயி  கொந்தளிப்பு..!
X

தமிழ் இலக்கியங்களில், செங்காந்தல் மலர் என குறிப்பிடப்படும் கண்வலி பயிர். இதனை அழியாமல் காத்து பயிரிட்டு வரும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூர், குமாரபாளையம் கிராமம் செல்வராஜ்.

கண்வலி பயிர் செய்யும் விவசாயிகளை ஏமாற்றி, வியாபாரிகளும், அதிகாரிகளும் கூட்டுக்கொள்ளை அடிக்கின்றனர் என கொந்தளிக்கிறார், திருப்பூர் மூலனூர் விவசாயி செல்வராஜ்.

தமிழ் இலக்கியங்களில் செங்காந்தல் மலர் என அழைக்கப்படும் பெருமை பெற்றது தான் கண்வலிச் செடி. மருத்துவ உபயோகத்திற்கு பயன்படும் கண்வலி விவசாயம் செய்யும் விவசாயிகளை வயிற்றில் அடித்து வியாபாரிகளும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகின்றனர்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் மற்றும் விவசாய, தொழில்துறை அமைச்சர்கள், துறை செயலாளர்கள், உயரதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என கண் வலி பயிர் விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை இடர்ப்பாடுகளால் மட்டுமின்றி வியாபாரிகள், அதிகாரிகள் அலட்சியம், சுரண்டல் போக்காலும் கண்வலி செய்யும் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூர், குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சி.செல்வராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், மூலனூர், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் மார்க்கம்பட்டி பகுதிகளில் கண்வலி பயிர் சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. மருத்துவ உபயோகத்திற்கு பயன்படும், தமிழ் இலக்கியங்களில் செங்காந்தல் மலர் எனப்படும் இந்த கண்வலி செடி தமிழகத்தில் சொற்ப அளவில் மட்டுமே பயிரிடப்படுகிறது. அவ்வாறு பயிரிடும் விவசாயிகளும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் அடாவடியால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி கண்ணீர் விடுகின்றனர் என்பதே நெஞ்சை சுடும் நிஜம்...!!

நஷ்டத்தில் தள்ளினாலும் தமிழகத்தில் சுமார் 35 ஆண்டுகளாக விவசாயிகள் கண்வலி செடி பயிரிட்டு வருகின்றனர். தென்னிந்தியாவின் காடுகளிலும், மலைகளிலும் இயற்கையாக வளர்ந்து இருந்த இந்த செடியின் கிழங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கி தங்கள் நிலங்களில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதை பயிர் செய்ய அதிக செலவு பிடிக்கும். இது அபூர்வ மருத்துவ மூலிகை ஆகும். மருத்துவ உலகின் இன்றியமையாத மூலப்பொருளாதாரமாக விளங்குகிறது.

இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் விவசாயிகளிடம் இருந்து இதன் விதைகளை வாங்குவதாக கூறப்படுகிறது. இதன் விதைகளை வாங்கும் பதிவு செய்யப்பட்ட கம்பெனி எது என்பது யாருக்கும் தெரியாது. வியாபாரிகளின் ஏஜென்ட்களே மிகக் குறைந்த விலைக்கு இதன் விதைகளை வாங்குகின்றனர்.இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை. மருத்துவத்தின் எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு மூலப்பொருளாக உள்ளது என்னும் ஒரு தகவலும் உள்ளது.

திருப்பூர் மூலனூர் குமாரபாளையம் விவசாயி செல்வராஜ் கூறுகையில், மற்ற அனைத்து பயிர்களை காட்டிலும் கண்வலி பயிர் சாகுபடி செலவு மிக மிக அதிகம். இது நன்றாக தெரிந்தும் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையை வியாபாரிகள் தருவது இல்லை. ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் விலையால் அதன் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பது உலக வர்த்தக நடைமுறை. கண்வலி பயிர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயன்தரக் கூடியது. அதேநேரத்தில் ஒருதடவை 4,5 ஆண்டுகள் வரை பலன் தரும். ஆனால் எல்லா வருடமும் நல்ல விளைச்சல் தருவது இல்லை.

ஓராண்டில் அதிக மழை பொழிவது, மழையே பெய்யாமல் இருப்பது, அதிக பனிப்பொழிவு போன்ற இயற்கை சாதகமற்ற சூழலால் விளைச்சல் குறையும் அல்லது சுத்தமாக இருக்காது. மிக கனமழை பெய்தால் செடிகள் முற்றிலும் அழிந்து அதிக நட்டத்ததை கொடுக்கும். 100 சதவீதம் கவனத்துடன் பயிர்களை பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்பட்டு விடும்.

சாதகமான சீதோஷ்ண நிலையால் 1,2 ஆண்டுகள் நல்ல மகசூலும் கிடைக்கும். இதனை கண்டு விவசாயிகள் சாகுபடி செய்வர். ஆனால் குறைந்த பலன் தரும். பலன் தந்தாலும் நல்ல விலை கிடைக்காது.

அனைத்து வருடமும் நியாயமான விலை கிடைத்தால் லாபம் தரும். கண்வலி பயிர் ஒரு ஏக்கர் வரை சாகுபடி செய்ய 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும். சாகுபடி அழித்தால் அதிக நஷ்டம் வரும்.

விவசாயிகளான எங்களைப் பொறுத்தவரையில், கிடைத்த வரை லாபம் என்று சாகுபடி செய்கின்றனர். வியாபாரிகளும் இதை பயன்படுத்தி குறைந்த விலை நிர்ணயித்து எங்கள் அடிவயிற்றில் அடிக்கின்றனர். இதனை மத்திய மாநில அமைச்சர்களும், தொழில், விவசாயத்துறை செயலர்களும் கண்டு கொள்வது இல்லை என, கொந்தளிப்புடன் குறிப்பிடுகிறார்.

ஓட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ சக்ரபாணி சொந்த ஊரான கள்ளிமந்தயம் வட்டாரத்தில் கண்வலி பயிர் விவசாயிகள் விடும் கண்ணீர் எம்.எல்.ஏ.வுக்கு தெரிவதே இல்லை. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட மத்திய இணையமைச்சர் எல். முருகனும், ஈரோடு எம்.பி தொகுதி வேட்பாளர் கணேசமூர்த்தி ஆகியோரும் கண்வலி விவசாயிகளை காக்க அளித்த வாக்குறுதி காற்றில் போனது ஏனோ? என உரத்த குரலில் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர், தமிழக கண்வலிப் பயிர் விவசாயிகள்!

கண்வலி பயிர் விவசாயம் அழிவில் இருந்து மீளுமா?

மத்திய, மாநில அமைச்சர்கள் மனம் வைத்தால் தான் தீர்வு கிடைக்கும்.

பொறுத்திருந்து பார்ப்போம்...!

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!