பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு, உடல் நலக்குறைவால் காலமானார்; அவருக்கு வயது 73.

மலையாளம், தமிழ் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெடுமுடி வேணு, பத்திரிகையாளராக இருந்து, நாடகங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த 1978ஆம் ஆண்டில், மலையாள திரையுலகில் காலடி வைத்தார். அபார நடிப்பாற்றலால் பலரையும் கவர்ந்த நெடுமுடி வேணு, 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

தமிழ் திரைப்படங்களிலும் நெடுமுடி வேணு நடித்துள்ளார். தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்', 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படத்திலும் நடித்து வந்தார். அண்மையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமடைந்தார்.

எனினும், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு உடல்நலம் குன்றியதால், திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். நெடுமுடி வேணுவின் மறைவுக்கு, திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!