கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடல்: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை மூடல்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடல்: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை மூடல்
X

தருமபுரியில் பேட்டியளித்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் நாளை செயல்படாது என அறிவிப்பு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடலுக்கு கண்டனம் - மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் நாளை செயல்படாது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் தருமபுரியில் பேட்டி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதால், பள்ளிகள் அடித்து சூறையாடப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது இளங்கோவன் கூறியதாவது: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை அதிர்ச்சிகரமானது. இது தொடர்பான அரசு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். கல்வியை வழங்கி வரும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும், ஆசிரியப் பெருமக்களும், எங்களிடம் பயிலும் பல லட்சம் மாணவ, மாணவியரை எங்கள் சொந்த குழந்தைகள் போல் பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த துயரமான சூழலைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து அந்தப் பள்ளியில் பயிலும் 3500 மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை அழித்ததும், பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதும், பள்ளி உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றதும் மன்னிக்க முடியாத சமூக விரோதச் செயல். இத்தைகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் எந்த நிறுவனத்திலும் நடைபெறாத வண்ணம், தமிழ்நாடு அரசு பாதுகாப்பு விதிகளை உருவாக்கி அரசாணை பிறப்பித்திட வேண்டும்.

இது குறித்து தமிழகத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் நாளை (திங்கட்கிழமை) தனியார் பள்ளி நிர்வாகிகளும், தனியார் பள்ளி பெற்றோர் சங்கங்களும் சேர்ந்து மனு அளிக்கவுள்ளோம். இதனால் நாளை தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் செயல்படாது என தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகள் விதிகளை மீறி விடுமுறை வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என இளங்கோவன் உறுதியாக தெரிவித்துள்ளார். நாங்கள் ஆட்சியர், எஸ்பி, அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்திக்க போகிறோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!