அம்பாசிடர் கார் தோற்றது ஏன்? வீழ்ச்சி கற்று தரும் பாடம்

அம்பாசிடர் கார் தோற்றது ஏன்? வீழ்ச்சி கற்று தரும் பாடம்
X
ஒருகாலத்தில் இந்திய சாலைகளின் ராஜா என்று கருதப்பட்ட வாகனமான அம்பாசிடர் கார் மாற்றங்களை மேற்கொள்ளாததால் மறைந்து போனது

பெரிய அம்பாசிடர் கார்ல போறவன்.. என்று கூட மக்கள் இயல்பாக சொல்லும் அளவிற்கு மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்து இருந்த கார் தான் அம்பாசிடர். மிடில் கிளாஸ் மக்களின் சொகுசு கார் என்பதை தாண்டி அரசியல்வாதிகள் தேர்வு செய்யும் காராகவும், நாடாளுமன்றம் தொடங்கி பல்வேறு அரசு துறைகளுக்கு வாங்கும் காராகவும், டாக்சியாகவும் கூட அம்பாசிடர் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இப்போதும் கூட கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் அம்பாசிடர் கார் டாக்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் அம்பாசிடர் கார்களை பார்ப்பது இப்போது மிகவும் அரிதானது. இந்திய சாலைகளின் ராஜாவாக இருக்கும் கிளாசிக் வெள்ளை நிற கார் -அம்பாசிடர் முக்கியமான இடத்தை வகிக்கும். ஒரு தலைமுறையினரின் அடையாளமாக இருந்தாலும், 2014 இல் இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடரின் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. காரில் மாற்றங்களை செய்வதற்கு பதிலாக.. போட்டியை சமாளிக்க முடியாமல்.. மிகப்பெரிய ரசிகர் படை இருந்தும் கூட உற்பத்தியை இந்த நிறுவனம் நிறுத்தியது.


இந்திய சுதந்திரத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மோரிஸ் மோட்டார்ஸ் மற்றும் இந்தியாவின் பிர்லா குடும்பம் இணைந்து ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தை உருவாக்கியது. இந்த நிறுவனம் தனது முதல் தொழிற்சாலையை குஜராத்தில் உள்ள போர்ட் ஓகாவில் நிறுவியது. 1948 இல், இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் சுதந்திரதினத்திற்கு பின் மேற்கு வங்காளத்தில் உள்ள உத்தரபாராவிற்கு மாற்றப்பட்டன. இந்த புதிய இடம் தான் அம்பாசிடரின் தாயகம்.

இப்போதும் கொல்கத்தாவில் மஞ்சள் நிற அம்பாசிடர் ஓட இதுவும் ஒரு காரணம். இந்த இடம் பின்னர் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆட்டோமொபைல் ஆலையின் தாயகமாக மாறியது வேறு கதை. 1958 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் அங்குள்ள தொழிற்சாலையில் அம்பாசிடர் காரைத் தயாரிக்கத் தொடங்கியது. அம்பாசிடர் ஒன்றும் முழுக்க முழுக்க ஒரிஜினல் கார் இல்லை. ஆம் இந்த கார் உண்மையில் மோரிஸ் மோட்டார்ஸ் உருவாக்கிய ஆக்ஸ்போர்டு சீரிஸ் III மாடலை அடிப்படையாகக் கொண்டது. அந்த காரை லேசாக மாற்றி இந்த கார் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த கார் ஒரு செடான் மாடலாக இருந்தது. இதில் மூன்று- பெட்டி கட்டமைப்பு என்ற கிளாசிக் மாடல் ஸ்டைல், மற்றும் கண் போன்ற ஹெட்லைட்கள், முன்பக்கம் எஞ்சின் மற்றும் பின்பக்கம் தனி பெட்டியுடன் இருந்தது. கார் பல்வேறு வண்ணங்களில் வந்தாலும், விற்பனையில் வெள்ளை நிறமே ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் டாக்சி, அரசு அலுவலர்கள், மிடில் கிளாஸ் போன்றவர்கள் அதிகம் வாங்கும் காராக., அவர்களின் அடையாளமாக இந்த கார் மாறியது. ஆனால் 90 களின் இறுதியில் இந்த கார் மார்க்கெட்டில் சரிய தொடங்கியது.

அம்பாசிடர் இந்தியாவில் வளர காரணம் அப்போது இந்திய சந்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறக்கப்படவில்லை. இதனால் கார் வாங்க நினைத்தவர்களுக்கு இந்த காரை தவிர வேறு கார் இல்லை. போட்டி இல்லை என்றதும் அம்பாசிடர் காரும் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. ஆனால் 90 களில் உலக மயமாக்கல் வந்ததும். இந்தியாவில் வெளிநாட்டு கார்களின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் 1991 இல், இந்தியப் பொருளாதாரம் உலக மயாக்கல் காரணத்தால் வெளிநாடுகளுக்கும் திறக்கத் தொடங்கியது. இதனால் தனியாக இருந்த அம்பாசிடர் காருக்கு திடீரென்று போட்டி வந்தது.


1983 இல் மாருதி 800 மூலம் மாருதி உத்யோக் - சுசுகி மோட்டார்ஸ் நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் அதிரடியாக காலடி எடுத்து வைத்தது. அட இப்படி கூட கார் இருக்குமா என்று மக்களை மாருதி யோசிக்க வந்தது. மாருதியின் வருகையால் இந்திய நடுத்தர வர்க்கம் இப்போது அதிநவீன அம்சங்களைக் கொண்ட கார்களைக் விரும்ப தொடங்கியது. அதோடு இவை அம்பாசிடரை விடவும் அதிக மலிவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டன.

தோல்வி ஏன்? : ஆனால் இது எதையும் அம்பாசிடர் கண்டுகொள்ளவில்லை. மாருதி பல மாடல்களை இறங்கினாலும்.. டாடா மார்க்கெட்டிற்குள் வந்தாலும் கூட அம்பாசிடர் தனது மாடலை மாற்றவில்லை. திறனை அதிகரிக்கவில்லை. இன்டீரியரை கூட மெருகேற்றவில்லை. மாறாமல் இருக்கும் எதுவும் அழிந்து போகும் என்பார்கள். அப்படிதான் இந்த அம்பாசிடர் காரும் மாற்றமே இல்லாமல் மார்க்கெட்டில் காணாமல் போக தொடங்கியது. மாருதி, டாடாவின் வேகமான மாற்றங்களுக்கு அம்பாசிடர் ஈடு கொடுக்க முடியவில்லை. அந்த காரை அப்போதே மாற்றி கொஞ்சம் அப்டேட் செய்து இருந்தால் இப்போதும் அவை மார்க்கெட்டில் இருந்திருக்கும். ஆனால் அப்படி செய்யாமல்.. ஒரே மாதிரி தான் இருப்போம் என்று அவர்கள் எடுத்த முடிவு அம்பாசிடர் காருக்கு முடிவுரை எழுத வழி வகுத்தது.

முக்கியமாக, அந்த கார் தனது ஸ்டேட்டஸ் சிம்பலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. கார் பல தசாப்தங்களாக அரசியல் மற்றும் கௌரவத்தின் சின்னமாக இருந்தது. சில தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் போதும். இந்த கார் முழு புதிய தலைமுறையினருக்கும் பிடித்ததாக மாறி இருக்கும். ஆனால் அதை அந்த நிறுவனம் செய்யவில்லை. அவர்கள் காரின் விலையை குறைக்கவோ, பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தவோ, மைலேஜை அதிகரிக்கவோ யோசிக்கவே இல்லை. அதோடு காரின் திறன், வேகம் எதுவுமே அதிகரிக்கவில்லை. இதையடுத்தே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் 2014 இல் அம்பாசிடர் தயாரிப்பை நிறுத்தியது.

இந்த காரின் தோல்வி கற்று தந்த ஒரே பாடம். மாற்றம் ஒன்றே மாறாதது. எந்த விஷயம் மாறாமல்.. அப்டேட் ஆகாமல் இருக்கிறதோ.... அந்த விஷயம் மறக்கப்படும்.... அல்லது மொத்தமாக அகற்றப்படும்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!