உலக விதவைகள் தினம்

விதவைகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறதா? விதவைகள் தினத்தை கொண்டாட முடியாது என்பது தான் உண்மை நிலை.

Update: 2021-06-23 02:04 GMT

உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  ஜூன் 23 ம் தேதியினை உலக விதவைகள் நாள்  என ஐ.நா. சபை அறிவித்தது

இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான கணவனை இழந்த பெண்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும் வகையில் உலக விதவைகள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர்.

காபூன் நாட்டின் ம‌றைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்‌‌வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3 வது குழுவின் அறிக்கை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.

உலக விதவைகள் தினம் ஒரு பார்வை

விதவைகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறதா? அல்லது கடைபிடிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு கடைப்பிடிக்கத்தான் முடியும் "விதவைகள் தினத்தை" கொண்டாட முடியாது என்பது தான் உண்மை நிலை.

விதவைத் தன்மை' ஒவ்வொரு பெண்ணையும் வறுமையில் தள்ளி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. இத்தகைய விதவைத் தன்மையின் விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே 'உலக விதவைகள் தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 23ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

கணவனை இழந்த பெண்கள் எண்ணிக்கை

தற்போது உலகம் முழுவதும் சுமார் 258 மில்லியன் விதவை பெண்கள் இருக்கின்றனர், அவர்களில் 115 மில்லியன் பெண்கள் கணவனை இழந்து வறுமையில் வாடுகின்றனர், 85 மில்லியன் விதவை பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதுமட்டும் அல்லாமல் 1.5 மில்லியன் குழந்தைகள், தந்தையை இழந்து தாய்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அக்குழந்தைகள் தங்களது ஐந்தாவது வயதைத் தாண்டும் முன்பாகவே தனது தாயையும் இழந்து விடுகின்றனர்.

கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரம்

குறிப்பாக கணவனை இழந்த ஒரு பெண் இந்த சமுதாயத்தில் கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரமாக மாறிவிடுகிறாள். எந்த வித சுபக்காரியங்களிலும் அவள் பங்கேற்க விரும்புவதில்லை, அப்படி அவள் பங்கேற்க நினைத்தாளும் சில சமூகம் அவளை 'அபசகுணம்' எனக் கருதியும் 'பாவம்' எனக் கருதியும் அங்கீகரிக்க மறுக்கிறது. சில இடங்களில், தனது இறந்த கணவனின் உடலை கழுவியத் தண்ணீரைக் குடிக்கும் அளவிற்குக் கொடுமைப்படுத்தப்படுகிறாள். இத்தகைய விதவை நிலை அவர்களை மட்டும் பாதிப்பதில்லை, அவர்கள் குழந்தைகளையும் பாதிக்கிறது.

விதவைப் பெண்கள் நிலை மாற

'சிறுபான்மை' எனும் வட்டத்தில் கூட, சிறிய இடத்தை பெற்றிருக்கும், கணவனை இழந்த பெண்களின் நிலை மாற, அந்தக் குறிப்பிட்ட சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவம் பற்றியான நடைமுறை அறிவு மேம்பட வேண்டும். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, பல விதவைப் பெண்கள் இன்றும் கூட சமூகத்தின் பிடியைத் தகர்தெறிந்து தைரியமான பெண்களாக உலா வருகின்றனர்.

Tags:    

Similar News