ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது
உலக சாரணர் தினம்-1907 ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுக்கூறும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. 1907 ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.
லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை நிகழ்ந்தது.எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொண்டாடப்படுகின்றது.சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.
வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம் ஜீவகாருண்யம், மரியாதை, தைரியம் போன்ற இன்னோரன்ன ஆளுமை விருத்தியம்சங்களைக் கொண்டு மனித நேயப்பண்புகளுடன் சேவைகள் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்த அமைப்பாக மிளிரும், 'எதற்கும் தயாராக இரு! " எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22 ம் தேதி பிறந்தார். ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.
1910 ம் ஆண்டு சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில் செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் உள்ளனர் எனபுள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று சாரணியர் இயக்கமும், பெண்கள் சாரணிய இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன. இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணியத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புதல் வேண்டும், என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும். பேடன்பவல் தனது இறுதிக்காலத்தில் துணைவியாரோடு ஆப்பிரிக்காவில் வசித்தார். 1941 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி காலமானார்.
சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர் இன்று உலகில் பலதுறைகளிலும் பெயர் பதித்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல்ஆம்ஸ்ரோங் ஒர் சாரணியரே இவர் அமெரிக்காவின் Eagle Scout விருது பெற்றவர். நிலவில் இதுவரை காலடி பதித்து நடந்த 12 பேரில் 11 பேர் சாரணர்கள் .(ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற ஆல்டிரின் உட்பட). 1959 லிருந்து இதுவரை 214 பேர் விண்வெளி விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் 125 பேர் சாரணர்கள். ஜெமினி 7, ஜெமினி 12, அப்பல்லோ 8, அப்பல்லோ 13, ஆகிய விண்கலன்களில் சென்று வந்தவர், NASA வின் தலைவராக இருந்தவர் ஜேம்ஸ் லோவல் ஒரு சாரணர். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி ஒரு Cub Scout ஆக இருந்தவர்.
அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் பில் கிலிண்ட்டன், ஜார்ஜ் புஷ் போன்றோர்களும் சாரணர்களே. உலகப் புகழ் பெற்ற Microsoft Computer நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் பில் கேட்ஸ் ஒரு சாரணர். இவ்வாறான பல சாரணியர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
இலங்கை சாரணர் சங்கம் 2012ம் ஆண்டில் நூற்றாண்டு நிறைவைக் கண்டது.