ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது

உலக மக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-08-01 03:46 GMT

உலக தாய்ப்பால் தினம்-ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இன்று உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தாய்ப்பால், பிறந்தகுழந்தையின் முதல் ஆகாரம். குழந்தை பிறந்து முதல் ஒருமணிநேரத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் தாய்ப்பால் அளிப்பது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாய்களுக்கும் நல்லது. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் பெண்கள், தாய்பாலூட்டாத பெண்களை விட வேகமாக குணமடைகிறார்கள், சிசெரியன் செய்தாலும் கூட இதன் பலன்கள் கிடைக்கின்றன.

குழந்தையின் பால் குடிக்கும் செயல்பாடு, உடலில் ஆக்ஸிடோசினை வெளியிட்டு, கர்ப்பப்பையை வேகமாக குணமாக்குகிறது. குழந்தைப்பேற்றுக்குப் பின்பு உடலின் அதிகப்படியான எடையை குறைப்பதிலும் தாய்ப்பாலுட்டுவது உதவுகிறது. மேலும் கர்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. தாய்ப்பாலூட்டுவது உடலில் மட்டுமல்ல, மனதளவிலும் பலன்களைத் தருகின்றது. குழந்தைப் பேற்றுக்குப் பின்பான மன அழுத்தம் குறைவடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.


எந்த ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டப்படுகிறதோ, அந்த குழந்தை, மனதளவிலும் நல்ல வளர்ச்சியைப் பெறும் என்று பல ஆய்வுகள் கூறியிருக்கிறது. குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியம். பால் கொடுக்கும் பொழுது, தாய் தன் குழந்தையை அரவனைத்து குழந்தையுடன் பேசும் போது, அவர்கள் இருவருக்கிடையே ஒரு பிணைப்பும் பந்தமும் ஏற்படுகிறது. அவர்கள் வளர்ந்தபிறகு, மற்றவர்களோடு அன்பாக நடந்துகொள்ளவும் இந்த பந்தம் உதவுகிறது. எனவே தான் தாய்ப்பால், வாழ்க்கையின் அடித்தளமாகிறது.

Tags:    

Similar News