இங்கிலாந்து பிரதமராக சாதிப்பாரா இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி?
இங்கிலாந்து பிரதமராக சாதிப்பாரா இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனக் என்ற கேள்வி எழுந்துள்ளது.;
உலக ஜனநாயக நாடுகளின் தொட்டில் என அழைக்கப்படுவது இங்கிலாந்து. கிரேட் பிரிட்டன் என்ற பெயரும் அதற்கு உண்டு. காரணம் உலகின் பல நாடுகளை தங்களது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த நாடு என்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்தியாவை சுமார் 400 ஆண்டுகள் காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த இங்கிலாந்து தற்போது பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கிறது.
இங்கிலாந்து ஒரு சிறிய தீவு தான். ஆனால் சூரியன் கூட எங்களை கேட்டு விட்டு தான் உதிக்கும் என்று அந்நாட்டு மக்கள் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு அவர்கள் உலகிற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்தவர்கள். இன்று உலகின் பல ஜனநாயக நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் நாடாளுமன்ற சட்டமன்ற அரசியல் சட்ட நடைமுறைகள் அனைத்தும் இங்கிலாந்து நாட்டின் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே பெரும்பாலும் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஆட்சி முறை முழுக்க முழுக்க இங்கிலாந்தை பின்பற்றி தான் உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் இங்கு மக்கள் பிரதிநிதிகளை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கு கட்சிக்கு மக்கள் வாக்களித்து அதன் அடிப்படையில் ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஒரு வித்தியாசம் தவிர மற்றபடி எல்லாம் கிட்டத்தட்ட இரண்டும் நாடுகளையும் சட்டமுறை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.
இத்தகைய வரலாற்று சிறப்புக்குரிய இங்கிலாந்து நாடு இன்று பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிப்பதால் ஏற்கனவே அங்கு பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து லிஸ் டிரெஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஆனார். பிரதமர் பதவியை பிடித்தார். ஆனால் அவரால் இரண்டு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. 45 நாட்களில் தன்னால் நிர்வாகத்தை நடத்த முடியாது என்று ராஜினாமா செய்துவிட்டு தனது பதவியில் இருந்து இறங்கிவிட்டார். இதன் விளைவாக அவருடன் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தற்போது இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் துணை அதிபராக கமலஹாரிஸ் இருந்து வருகிறார். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதுவும் நமது தமிழகத்தை சேர்ந்த பெண்மணி.
இப்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருப்பவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது இந்தியர்களுக்கு உலக அரங்கில் கிடைக்கும் பெருமையை பறைசாற்றுகிறது. அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு, ஒழுக்கம் , நேர்மை அத்துடன் எந்த நாட்டில் குடியிருக்கிறார்களோ அந்த நாட்டிற்காக தங்களை முழுதாக அர்ப்பணித்து வேலை செய்வது போன்ற காரணங்களால் இந்தியர்கள் தாங்கள் எந்த நாடுகளில் வசித்தாலும் நம் நாட்டிற்கு விசுவாசியாக மாறிவிடுகிறார்கள்.
ரிஷி சுனக்கின் மூதாதையர்கள் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இங்கிலாந்தில் பிறந்த நாட்டில் பிறந்த இவர் அந்நாட்டின் மதிப்புமிகு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர் .இவரைப் பற்றிய இன்னொரு கூடுதல் தகவல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சாப்ட்வேர் அதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். அந்த வகையில் ரிஷி சுனக்கை தமிழகத்தின் மருமகன் என்று கூட சொல்லலாம்.
இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் ரிஷி சுனக் இரவு பகலாக உழைத்து நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்பேன் என சூளுரைத்திருக்கிறார். இங்கிலாந்து நாடு எவ்வளவு சீக்கிரம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் வீழ்ந்து கிடக்கும் இங்கிலாந்தை தூக்கி நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. ரிஷி சுனக் இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையும் பெற்று இருக்கிறார். அத்துடன் 42 வயதிலேயே அவர் இந்த உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார்.
அவர் இங்கிலாந்து அரசியலில் கால் பதித்தது 2015 ஆம் ஆண்டு தான். ரிச்மான்ட் என்ற நாடாளுமன்ற தொகுதியில் இருந்து அவர் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் நிதித்துறை இணை மந்திரி , நிதித்துறை மந்திரி என பல பதவிகளை வகித்து உள்ளார். காலம் அவருக்கு கை கொடுத்தால் அவர் நிச்சயம் சாதிப்பார். லிஸ் டிரஸ் உடன் போட்டியில் இருந்த போது இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தான் என்று ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு காலம் கனிய வில்லை. இப்போது எந்த பதவிக்கு அவர் போட்டியிட்டாரோ அந்த பதவி அவரை தானாக தேடி வந்திருக்கிறது. அதனால் அவர் நிச்சயம் சாதிப்பார் என்று நம்புவோமாக.