சமூகப்பரவலாக மாறும் குரங்கு அம்மை: பொதுமக்களே உஷார்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய், சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக நாடுகள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டும் வரும் சூழலில், தற்போது குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்பட 20 நாடுகளில், 200-க்கும் மேற்பட்டோருக்கு, குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து, உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள தகவலில், குரங்கு அம்மை, மக்கள் கவலைப்படும் அளவுக்கு வேகமாக பரவக்கூடியது அல்ல. அதே நேரம், மெதுவாக இது சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்த, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும். வரும் நாட்களில் குரங்கு அம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.