ஸ்விஃப்ட் என்றால் என்ன? ரஷ்யாவை அது எவ்வாறு பாதிக்கும்?
சர்வதேச கட்டண முறையான ஸ்விஃப்டில் இருந்து பல ரஷ்ய வங்கிகளை விலக்க அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன;
உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து ரஷ்ய நாட்டு வங்கிகளை விலக்குவதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது "சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவது" என்று கூட்டறிக்கை கூறுகிறது. இதன்படி ரஷ்ய வங்கிகள் தங்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வங்கிகளுடன் பாதுகாப்பாக தொடர்பு கொள்ள முடியாது அர்த்தமாகும்.
ஸ்விஃப்ட் என்றால் என்ன?
ஸ்விஃப்ட் என்பது உலகளாவிய வங்கிகளுகக்கிடையே நிதித் தொலைத்தொடர்புகளுக்கான சமூகம் ஆகும், இது நாடுகளுக்கிடையே பணத்தை விரைவாக மாற்ற அனுமதிக்கிறது. இது சொசைட்டி ஃபார் வேர்ல்டுவைட் இன்டர்பேங்க் ஃபைனான்சியல் டெலிகம்யூனிகேஷன் என்பதன் சுருக்கம். (Society for Worldwide Interbank Financial Telecommunication.)
இது பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு 1973ல் உருவாக்கப்பட்டது ஸ்விஃப்ட்டில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000 வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்துள்ளது.
ஆனால் ஸ்விஃப்ட் என்பது ஒரு வங்கி அல்ல. இது பயனர்களுக்கு பணம் அனுப்புவது, மற்றும் வந்தது குறித்த உடனடி செய்தியிடல் அமைப்பாகும்,
ரஷ்யா மீது என்ன தடைகள் விதிக்கப்படுகின்றன?
நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே டிரில்லியன் கணக்கான டாலர்கள் கைமாறுவதால், இது ஒரு நாளைக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான செய்திகளை அனுப்புகிறது. அந்த செய்திகளில் 1%க்கும் அதிகமானவை ரஷ்ய கட்டணங்களை உள்ளடக்கியதாக கருதப்படுகிறது.
ஸ்விஃப்டை யார் சொந்தமாக வைத்து கட்டுப்படுத்துகிறார்கள்?
ஸ்விஃப்ட் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளால் உருவாக்கப்பட்டது, இது ஒரு நிறுவனம் தங்கள் சொந்த அமைப்பை உருவாக்குவதையும் ஏகபோகத்தையும் கொண்டிருக்க விரும்பவில்லை. நெட்வொர்க் இப்போது 2,000க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் கூட்டாக செயல்படுகிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஆஃப் இங்கிலாந்து உட்பட, உலகெங்கிலும் உள்ள முக்கிய மத்திய வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து, நேஷனல் பேங்க் ஆஃப் பெல்ஜியத்தால் இது மேற்பார்வை செய்யப்படுகிறது.
ஸ்விஃப்ட் அதன் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான சர்வதேச வர்த்தகத்தை சாத்தியமாக்க உதவுகிறது. நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைகளில் தலையிடாது.
ஸ்விஃப்ட் பொருளாதாரத் தடைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. அவற்றை தடை செய்யும் முடிவு அந்தந்த அரசாங்கத்திடம் உள்ளது. இருப்பினும், அணுசக்தித் திட்டம் மீதான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக 2012 இல் ஈரானுக்கு தடை விதித்தது. அதன் காரணமாக அதன் எண்ணெய் ஏற்றுமதி வருவாயில் கிட்டத்தட்ட பாதி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் 30% இழந்தது.
ஸ்விஃப்ட்டில் இருந்து ரஷ்யாவை தடை செய்வது அதை எவ்வாறு பாதிக்கும்?
இந்த நிலையில், ஸ்விஃப்டில் இருந்து எந்த ரஷ்ய வங்கிகள் அகற்றப்படும் என்பது தெரியவில்லை. இது வரும் நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் அறிக்கையின்படி, இந்த நடவடிக்கையானது, இந்த வங்கிகள் சர்வதேச நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுவதால், உலகளவில் அதன் வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
ஸ்விஃப்ட் வழங்கும் உடனடி பரிவர்த்தனைகளுக்கான அணுகலை ரஷ்ய நிறுவனங்கள் இழக்க செய்வதே இதன் நோக்கம். இதனால், வங்கிகள் ஒன்றுக்கொன்று நேரடியாகச் சந்தித்து பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன் காரணமாக ஏற்படும் தாமதங்கள் மற்றும் கூடுதல் செலவுகளைச் சேர்த்து, இறுதியில் ரஷ்ய அரசாங்கத்திற்கான வருவாயைக் குறைக்கும்.இதன் காரணமாக விவசாயப் பொருட்களுக்கான கொடுப்பனவுகள் கடுமையாக பாதிக்கப்படும்.
ரஷ்யா 2014ல் கிரிமியாவை இணைத்தபோது, ஸ்விஃப்ட்டில் இருந்து வெளியேற்றப்படும் என அச்சுறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை போர்ப் பிரகடனத்திற்குச் சமமாக இருக்கும் என்று ரஷ்யா கூறியது.
ஆனால், மேற்கத்திய நாடுகள் அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றாலும், இது போன்ற அச்சுறுத்தல் ரஷ்யாவை அதன் சொந்த, மிகவும் புதிய, எல்லை தாண்டிய பரிமாற்ற முறையை உருவாக்கத் தூண்டியது.
அத்தகைய தடைகளை எதிர்கொள்ள, ரஷ்ய அரசாங்கம் மிர் எனப்படும் தேசிய கட்டண அட்டை அமைப்பை உருவாக்கியது. இருப்பினும், தற்போது சில வெளிநாடுகள் இதைப் பயன்படுத்துகின்றன.
ஸ்விஃப்ட் நடவடிக்கை மீது மேற்கு நாடுகள் ஏன் ஒற்றுமையாக இல்லை?
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகள் ரஷ்யாவின் ஸ்விஃப்ட் பயன்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டின.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் முக்கிய வழங்குநராக ரஷ்யா உள்ளது. மேலும் மாற்று விநியோகங்களைக் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. எரிசக்தி விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், மேலும் இடையூறு ஏற்படுவதை பல அரசாங்கங்கள் தவிர்க்க விரும்புகின்றன.
ரஷ்யாவிற்கு கடன்பட்டுள்ள நிறுவனங்கள் பணம் பெற மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சர்வதேச வங்கி குழப்பத்தின் ஆபத்து மிகவும் பெரியது என்று சிலர் கூறுகிறார்கள்.
ரஷ்யாவின் முன்னாள் நிதியமைச்சர் அலெக்ஸி குட்ரின், ஸ்விஃப்ட்டில் இருந்து துண்டிக்கப்படுவது ரஷ்யாவின் பொருளாதாரத்தை 5% குறைக்கும் என்று கூறியுள்ளார்.
ஆனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் நீடித்த தாக்கம் குறித்து சந்தேகம் உள்ளது. ரஷ்ய வங்கிகள் பொருளாதாரத் தடைகளை விதிக்காத நாடுகளின் வழியாக பணம் செலுத்தலாம், அதாவது சீனா போன்ற அதன் சொந்த பணம் செலுத்தும் முறை மூலமாக.