இணையத்தில் டிரெண்டிங் ஆகும் ஜப்பான் நாட்டு இளவரசியின் காதல் திருமண செய்தி

ஜப்பான் நாட்டு இளவரசியின் காதல் திருமண செய்தி இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Update: 2024-02-04 14:30 GMT

காதல் கணவருடன் ஜப்பான் நாட்டு இளவரசி.

விரும்பிய காதலனை கரம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜப்பான் நாட்டின் இளவரசி மாகோ செய்த சிலிர்க்க வைக்கும் தியாகம் குறித்த விபரம் காதல் மாதமான பிப்ரவரியில் உலா வருகிறது. 

சாதி, மதம், இனத்தை கடந்த ஓர் உன்னத உணர்வு. இந்த தடைகளை தாண்டிய காதலுக்கு சில பெற்றோர் ‛ஓகே' சொல்லலாம். ஆனாலும் இருப்பினும் பல பெற்றோர் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர். முந்தைய காலத்தை ஒப்பிடும்போது தற்போது சாதி, மதம், இனம், பொருளாதார நிலையை கவனத்தில் கொள்ளாமல் மகன், மகள் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களின் காதலன்/காதலியுடன் சேர்த்து வைக்கும் பெற்றோர் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளதை நாம் புறம் தள்ளிவிட முடியாது.

ஒருவேளை பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இப்படி திருமணம் செய்யும் ஜோடிகள் பலரும் தங்களது பெற்றோரின் எதிர்ப்பை தொடக்க காலத்தில் பெறுகின்றனர். ஆனாலும் கூட பெற்றோரை பிரிந்து ‛‛உனக்காக நானும், எனக்காக நீயும்'' என்ற நான்கு வார்த்தைகளில் காதலர்கள் கரம் பிடித்து இல்லற வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

இப்போது பிப்ரவரி மாதம் தொடங்கி உள்ளது. இந்த மாதம் காதலுக்கு மிகவும் பெயர் பெற்ற மாதமாகும். இந்த மாதத்தின் 14ம் தேதி தான் காதலர் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் காதலுக்காக ஜப்பான் இளவரசி செய்த சம்பவம் குறித்த சிலிர்க்க வைக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தன்னுடன் படித்த நபரை கரம்பிடித்த ஜப்பான் இளவரசி செய்த தியாகம் என்ன? என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஜப்பானில் அரசராக இருப்பவர் அகிஷினோ. இவரது மனைவி கிகோ. இந்த தம்பதியின் மூத்த மகள் மாகோ. இவர் 1991ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி பிறந்தார். இளவரசியாக மாகோ வளர தொடங்கினார். இவர் காகுஷியினில் பள்ளி படிப்பை முடித்தார். இளவரசி என்பதால் மிகவும் பாதுகாப்பான சூழலில் அவர் வளர தொடங்கினார். பள்ளிகளிலும் கூட அவரை யாரும் நெருங்க முடியாது. ஆனால் இத்தகைய நடவடிக்கையில் இருந்து அவர் விலக தொடங்கினார். அரச குடும்பத்தின் பாரம்பரிய மரபுகளை தாண்டி தனக்கான சுதந்திரத்தை அனுபவிக்க அவர் விரும்பினார். டோக்கியோ சர்வதேச கிறிஸ்டியன் யூனிவர்சிட்டி மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அவர் உயர்படிப்பை படித்தார்.

இந்நிலையில் தான் 2012ம் ஆண்டில் மாகோவுக்கு, கை கோமுரோ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக படித்ததால் அடிக்கடி சந்தித்து பேசினர். இருவரும் நட்பாக பழக தொடங்கி மாறிமாறி அதிக பாசத்தை பொழிந்தனர். இது அவர்கள் இடையேயான பந்தத்தை இன்னும் நெருக்கமாக்கியது. நட்பு என்பது காதலாக அவர்களின் இதயத்தில் மலர்ந்தது. மாகோ ஜப்பான் இளவரசியாக இருக்கும் நிலையில் கை கோமுரோ சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தான். முன்பே சொன்னது போல் காசு, பணத்தை எல்லாம் பார்க்காமல் வருவது தானே காதல். அதற்கு இளவரசி மாகோ மட்டும் விதிவிலக்கா என்ன?. இதையடுத்து 2018 ல் கை கோமுரோ தனது சட்ட மேற்படிப்புக்காக நியூயார்க்கில் உள்ள போர்தாம் யூனிவர்சிட்டிக்கு சென்றார். அதுவரை நேரில் சந்தித்து வந்த இந்த ஜோடிக்கு இடையே பிரிவு ஏற்பட தொடங்கியது. இருவரும் செல்போன்கள், வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தான் அவர்களின் காதல் விவகாரம் மாகோவின் குடும்பத்துக்கு தெரியவந்தது. கை கோமுரா உடனான காதலை கைவிட வேண்டும் என மகோவிடம் குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால் அவர் கேட்கவில்லை. மாறாக தான் திருமணம் செய்தால் காதலன் கை கோமுராவை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக கூறினார். ஜப்பானில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சாதாரண நபரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் இம்பிரீயல் ஹவுஸ் சட்டம் 1947 என்பதன் விதிகளை பின்பற்ற வேண்டும். அதாவது அரச குடும்ப வாரிசு என்பதை துறந்து வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம். மேலும் அரச குடும்ப வாரிசுக்கு கிடைக்கும் மரியாதை எதுவும் கிடைக்காது.

இதையடுத்து சற்றும் யோசிக்காத மாகோ தனது அரச குடும்ப பந்தத்தை துறந்தார். பொதுவாக அரச குடும்ப வாரிசை துறக்கும் நபருக்கு அரச குடும்பத்தின் சார்பில் 1.3 மில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10.78 கோடி) வழங்கப்படும். அதேபோல் மாகோவுக்கும் வழங்க முன்வந்தனர். ஆனால் அதனையும் மாகோ மற்றும் அவரது காதலர் ஏற்க மறுத்தனர். அதன்பிறகு இருவரும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டனர். மாகோ அரச குடும்ப வாரிசை துறக்காமல் இருந்தால் அவருக்கு வாழ்நாளில் கடைசி வரை தொடர்ந்து மரியாதை கிடைக்கும். அதோடு அவருக்கு பல நூறு கோடி சொத்துகள் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அரச மரியாதை, சொத்துகள் எல்லாம் வேண்டாம். காதலனே போதும் என வெளியேறினார்.

மாகோ-கை கோமுராவின் திருமணம்  டோக்கியோவில் 2021 அக்டோபர் 21ம் தேதி தனியார் ஹோட்டலில் நடந்தது. இப்போது இந்த ஜோடி அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்போது ஜப்பானில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் காதல் மாதமான பிப்ரவரியில் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.

Tags:    

Similar News