இலங்கை வன்முறை: ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பி ஓட திட்டம்?
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.;
இலங்கை மக்கள் கடும் கொந்தளிப்புடன் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் வீடுகளுக்கு தீ வைத்தும் தாக்குதல் நடத்தியும் வருவதால் ஜனாதிபதி கோத்தபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கொழும்பில் 5 விமானங்கள் தயாராக உள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டது. எரிபொருள், மின்சாரம், பெட்ரோல், உணவுப்பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் ஒருநாளைக்கு ஒரு வேலை, இரண்டு வேலை மட்டுமே உண்ணும் நிலை ஏற்பட்டது. வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆளும் அரசியல் கட்சியின் சுயநலத்தால் இந்த நிலை நாட்டில் ஏற்பட்டது என மக்கள் கொந்தளித்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டின. இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு அரசின் தவறான நிர்வாகத்திறமை தான் காரணம் எனக்கூறி பொதுமக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் செய்தனர். இதனைதொடர்ந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் எனக்கூறி கொழும்பு நகரத்தில் மக்கள் தொடர் போராட்டம் செய்தனர்.
மக்களின் எதிர்ப்பாலும், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பாலும், நாட்டில் நிலவும் மோசமான சூழலை கருத்தில்கொண்டு வேறு வழியில்லாமல் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விளகினார்ர். பிரதமர் பதவி விலகியதை தொடர்ந்து அதிபரும் பதவி விலகவேண்டும் என பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தாக்கியதால் நேற்று போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.
இந்த கலவரத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் ஆளுங்கட்சி எம்.பி உள்பட 10 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இலங்கையின் குருங்கலாவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் மீது போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியின் அலுவலகம் மற்றும் அவர்களது வீடுகளுக்கும் போராட்டகாரர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பதவி விலகிய மகிந்த ராஜபக்சே அவரது குடும்பத்தினருடன் இலங்கை பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது. மேலும் பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய அவர் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி வெளிநாடு தப்பி செல்லதாக தகவல் வெளியாகியுள்ளன.