இலங்கை நெருக்கடி: தீக்கிரையாகும் சொத்துக்கள் - அடுத்து என்ன நடக்கும்?
பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கையில், தற்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.;
கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வன்முறை ஏற்பட்டது.
காலி முகத்திடலிலுள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபயவுக்கு அனுப்பினார்.
இந்த வன்முறை தற்போது நாடு முழுவதும் பரவி வருகின்ற நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகின்றது. அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களின் ஆதரவாளர்கள் சொத்துக்கள் என தொடர்ந்து சேதம் விளைவிக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் தீக்கிரையாகி வருகிறது. இதுபோன்ற சூழலில், இலங்கையில் அடுத்து என்ன நிகழும் என பலரும் கவலையுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்
அரசாங்கத்தின் நிலைமை என்ன?
பிரதமர் பதவி விலகியதால், முழு அமைச்சரவையும் இல்லாது போன பின்னணியில், ஜனாதிபதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இடைக்கால அரசை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. .
இடைக்கால அரசு அமைக்காவிடினும், வெளியில் இருந்து ஆதரவு வழங்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று ஏற்பட்ட கலவரம் காரணமாக இடைக்கால அரசிற்கு சஜித் பிரேமதாச ஆதரவு வழங்குவதற்கான சாத்தியம் இருக்காது
சபாநாயகர் தேர்தலில் ஆதரவு வழங்கிய 148 பேரும் ஆதரவு வழங்கும் பட்சத்தில், கோத்தபய ராஜபக்ச இடைக்கால அரசை அமைக்க முடியும் என்றாலும், அவ்வாறு அமைந்தால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் கிடைக்காது.
மேலும், எதிர்க்கட்சியின் ஆதரவு இல்லாமல், அரசு ஒன்றை கோத்தபய அமைத்தால், அதை இடைக்கால அரசு என்று கூற முடியாது. அரசாங்கத்துடன், எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் மாத்திரமே அதனை இடைக்கால அரசாங்கம் என கூற முடியும்.
இது இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத ஒரு அரசியல் நெருக்கடியாக உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமித்து, இடைக்கால அரசை அமைக்க கோத்தபய முயற்சிக்கக்கூடும். ஆனால், மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமித்து, புதிய இடைக்கால அரசை அமைத்தால், எதிர்க்கட்சிகள் அதனை எதிர்க்கும்.
தற்போதைய சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. எனினும், அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் என பல இடங்களில் தீக்கிரையாகி வருகின்ற நிலையில், தற்போது ஆளும் அரசாங்கத்திற்கு யாரும் ஆதரவு வழங்க முன்வர மாட்டார்கள்.
ஜனாதிபதியும் பதவி விலகினால் என்ன நடக்கும்?
ஒருவேளை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் பதவி விலகும் பட்சத்தில், அவரது பதவி அடுத்ததாக பிரதமருக்கு செல்லும்படியாக அரசியலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரதமரும் பதவி விலகியுள்ள நிலையில், சபாநாயகர் தான் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும். சபாநாயகரும் ஜனாதிபதி பதவியை ஏற்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, பெரும்பான்மை ஆதரவை கொண்ட ஒருவர், ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்றாலும் தற்போது அதற்கும் சாத்தியமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
யாரும் பதவியேற்க மறுத்தால் அடுத்து என்ன நடக்கும்?
நாட்டில் இருக்கக்கூடிய இந்த அசாதாரண சூழ்நிலையில், யாரும் பதவியேற்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அடுத்து என்ன நடக்கும்?
இத்தகைய குழப்பமான சூழலில், கட்டாயம் யாராவது ஒருவர் ஜனாதிபதி பதவியை ஏற்க சம்மதம் தெரிவிக்கலாம். இதில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்க சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.
சர்வதேச நாணய நிதியம், கட்டாயமாக நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வரையறுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வழங்கும் வகையில் ஒரு செயல்பாட்டை முன்னெடுக்கும்.
தற்போது நிலவும் சூழ்நிலையில், கோத்தபய ராஜபக்ச கட்டாயம் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதுடன், அடுத்த ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், இலங்கை மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் கைகளுக்கு செல்லும் .
இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மத்திய வங்கி சென்றால், நாட்டின் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கான சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
சாதாரண மக்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும், பெரும்பாலான சலுகைகள் கிடைக்காது. வங்கிகளின் வட்டி வீதம் அதிகரிக்கும்.
இதன் மூலம் அரசியல் தீர்வு எட்டப்படும் என்றாலும், இலங்கை மக்களின் வாழ்வாதாரம் என்னாவாகும் என்பதே தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி?