வங்காள தேச பிரதமராக ஐந்தாம் முறையாக பதவி ஏற்க போகும் ஷேக் ஹசீனா

தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் வங்காள தேச பிரதமராக ஐந்தாம் முறையாக பதவி ஏற்க போகிறார் ஷேக் ஹசீனா;

Update: 2024-01-08 14:14 GMT

ஷேக் ஹசீனா.

வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 2009 முதல் தோல்வியே கண்டிராத ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். யார் இவர் என்பது குறித்த விவரங்களை இனி பார்க்கலாம்.

வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், வங்கதேசத்தின் பிரதமராக 5-வது முறையாக பொறுப்பேற்க இருக்கிறார் ஷேக் ஹசீனா.

வங்கதேசத்தில் தேர்தலை நடுநிலையான அரசு அமைத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்த ஷேக் ஹசீனா, எதிர்க்கட்சிகளை பயங்கரவாதிகள் எனவும் முத்திரை குத்தினார். தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால்  பங்காளதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. எதிர்கட்சிகள் பெரும்பாலானவை தேர்தலை புறக்கணித்ததால் ஷேக் ஹசீனா எளிதில் வென்றார். வங்கதேசத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் ஷேக் ஹசீனா. ஷேக் ஹசீனா அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்தான். வங்கதேசத்தின் நிறுவன தந்தையும் முதல் ஜனாதிபதியுமான வங்கபந்து என போற்றப்படும் ஷேக் முகம்மது முஜிபுர் ரகுமாமானின் மகள் ஆவார்.

வங்கதேசத்தில் நீண்ட காலம் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருப்பவர் என்ற பெருமையையும் இவருக்கே உள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வங்கதேச பிரதமராக உள்ளார். உலக அளவில் நீண்ட காலம் மக்களால் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பில் இருக்கும் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது.

1947 ஆம் ஆண்டு பிறந்த ஷேக் ஹசீனாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்தியாவுடனும் நெருக்கமான உறவையே ஷேக் ஹசீனா கையாண்டு வருகிறார். இதனால், ஷேக் ஹசீனாவின் வெற்றி இந்தியா - வங்காளதேசம் இடையேயான உறவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தை பொறுத்தவரை இந்தியாவின் மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.

நமது அண்டை நாடான வங்காளதேசம்  மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. இந்திராகாந்தி இந்திய பிரதமராக இருந்த போது தான்  வங்க தேச மக்களுக்கான பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்தியா போரிட்டு வங்க தேசத்தை தனி நாடாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வென்றுள்ள ஷேக் ஹசீனா இந்தியாவை தனது சிறந்த மதிப்பிற்குரிய நட்பு நாடு என குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News