வங்கதேசத்தில் இந்து பெண்கள் பலாத்காரம்: மணிப்பூருக்காக நீலிக்கண்ணீர் வடித்தவர்கள் எங்கே?
வங்காள தேசத்தில் இந்து பெண்களின் கற்பு சூறையாடப்படுவதால் மணிப்பூர் கலவரத்திற்காக நீலி கண்ணீர் வடித்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு உண்டு என்றால் அது நமது அண்டை நாடான வங்கதேசம் தான். கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட வங்காளதேச மக்கள் அவர்கள் பேசும் வங்காள மொழியால் பாகிஸ்தானால் துன்புறுத்தப்பட்டு வந்தனர். இதன் காரணமாக 1971 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு எதிராக போர் கொடுத்து வங்காள மக்களின் உரிமையை காத்ததோடு தனி நாடாகவும் அதனை பிரகடனம் செய்தார். இது வங்காளதேசத்தின் கடந்த கால வரலாறு.
ஆனால் அந்த நாட்டில் உள்ள பூகோள அமைப்பின் படி அங்கு முஸ்லிம்கள்தான் அதிக அளவில் வசிக்கிறார்கள். இந்துக்கள் சிறுபான்மை மக்களாக உள்ளனர். மொத்தம் உள்ள மக்கள் தொகையில் சுமார் எட்டு சதவீதம் மட்டுமே இந்துக்கள் உள்ளனர். தற்போது நடந்து வரும் கலவரம் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை என்றாலும் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் இன்னும் கலவரம் ஓயாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது அங்கு இந்துக்களின் வீடுகள் சூறையாடப்படுகின்றன. அவர்களது சொத்துக்கள் வர்த்தக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இந்து பெண்கள் போராட்டக்காரர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனை ராணுவமும் போலீசும் கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்து பெண்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களது கற்பு சூறையாடப்படுகிறது.
இந்திய அரசு இந்த பிரச்சினையில் இன்னும் இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் இந்த பிரச்சினையிலும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மலிவான அரசியல் செய்கின்றன. வங்காளதேசத்தில் நடப்பது போல் இந்தியாவிலும் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மையினருக்கு ஆபத்து வரும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பேசி வருவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. இந்தியா ஒரு ஆன்மீக நாடு, புண்ணிய பூமி. ஆனால் வங்காளதேசம் அப்படி அல்ல.
அங்கு இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் பலமுறை ராணுவம் தான் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. பாகிஸ்தானிலும் அதே போல் தான் நடந்துள்ளது. ஆதலால் வங்காளதேசத்தை இந்தியாவுடன் ஒப்பிட்டு பேசுவது அரசியல் ஆதாயத்திற்காக பேசப்படும் ஒரு விமர்சனம் ஆகும். உண்மையில் இந்திய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா? நமது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஆண்டு இரண்டு இனப்பிரிவு மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வடித்தது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . முதல்வரை மாற்றும் அளவிற்கு ஆட்சியே ஸ்தம்பித்தது.
அந்த சூழலில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள் என பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பிங்சை வைத்து பாராளுமன்றத்தையே செயல்பட விடாமல் முடக்கினார்கள் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர். உலகமே அதனை கண்டு வெட்கி தலை குனிந்ததாகவும் ராகுல் காந்தி நீலிக்கண்ணீர் வடித்தார். ஆனால் இப்போது நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் இந்து பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது .இதை உலகம் முழுவதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் அன்று மணிப்பூருக்காக நீலிக் கண்ணீர் வடித்த ராகுல் காந்தியும் அவரது கட்சியினரும் இன்று என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள் இந்தியன் என்ற உணர்வு உள்ள அரசியல் விமர்சகர்கள். இதற்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதே இப்போது உள்ள கேள்வியாகும்.