முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜபக்சே கடிதம் - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே எழுதியுள்ள கடிதம், அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.;
அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதுவரையில்லாத அளவுக்கு விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் கடும் துயருக்கு ஆளாகி உள்ளனர். அங்குள்ள தமிழர்களும், இதற்கு விதிவிலக்கல்ல.
அதே நேரம், இலங்கைக்கு இந்தியா நிதி உதவியுடன், பொருள் உதவி, மருந்து பொருட்கள் என வழங்கி, இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து வருகிறது. அதேபோல், அங்குள்ள தமிழர்களுக்கு உதவ, தமிழக அரசும் முன்வந்துள்ளது. இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இச்சூழலில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை, தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது.
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு, இலங்கை பிரதமர் ராஜபக்சே கடிதம் எழுதியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.