13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

Update: 2021-09-10 03:54 GMT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார், அதில் தொடக்கவுரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மாண்புமிகு அதிபர் புடின் அவர்களே, அதிபர் ஷி அவர்களே, அதிபர் ராமபோசா அவர்களே, அதிபர் பொல்சனாரோ அவர்களே, வணக்கம். இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை வகிப்பது எனக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய உச்சி மாநாட்டிற்கான விரிவான செயல்திட்டம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் ஒப்புதல் அளித்தால் இந்த செயல்திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். நன்றி, செயல்திட்டம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

மேன்மை மிகுந்த தலைவர்களே! இந்த செயல் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் நமது தொடக்க உரைகளை சுருக்கமாக நாம் அனைவரும் வழங்கலாம். முதல் தொடக்க உரையை வழங்கும் சுதந்திரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன். அதன் பின்னர் ஒவ்வொரு மாண்புமிகு தலைவரையும் தொடக்க உரை வழங்குவதற்காக நான் அழைப்பேன்.

இந்த தலைமை பொறுப்பின் போது அனைத்து பிரிக்ஸ் பங்குதாரர்கள் மற்றும் அனைவரிடமிருந்தும் முழு ஒத்துழைப்பை இந்தியா பெற்றது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றி மிகுந்தவன் ஆவேன். கடந்த ஒன்றரை தசாப்தங்களாக பல்வேறு சாதனைகளை பிரிக்ஸ் தளம் சந்தித்துள்ளது. உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான சக்தி மிகுந்த குரலாக இன்றைக்கு நாம் இருக்கிறோம். வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்துவதற்கும் பயனுள்ளதாக இந்த தளம் விளங்குகிறது.

புதிய வளர்ச்சி வங்கி, எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி ஒத்துழைப்பு தளம் உள்ளிட்ட வலுவான அமைப்புகளை பிரிக்ஸ் உருவாக்கி உள்ளது. இவை அனைத்தும் மிகவும் வலுவான அமைப்புகள். நாம் பெருமைப்பட நிறைய இருக்கிறது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை. அதே சமயம், நாம் மிகவும் சுய-திருப்தி அடைந்து விடாமல், இன்னும் அதிக நன்மைகளை அடுத்த 15 வருடங்களில் பிரிக்ஸ் உருவாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

சரியாக இந்த முன்னுரிமையை தான் தனது தலைமைத்துவ காலத்திற்காக இந்தியா தேர்ந்தெடுத்துள்ள மையக்கருவான 'பிரிக்ஸ்@15: தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்த கருத்துக்கான பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு' வெளிப்படுத்துகிறது. இந்த நான்கு C-க்களும் ஒரு வகையில் நமது பிரிக்ஸ் கூட்டின் அடிப்படை கொள்கைகள் ஆகும்.

இந்த வருடம், கொவிட் ஏற்படுத்திய சவால்களுக்கு இடையிலும் 150-க்கும் அதிகமான பிரிக்ஸ் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இவற்றில் 20-க்கும் அதிகமானவை அமைச்சர்கள் மட்டத்தில் ஆனவையாகும்.

பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, பிரிக்ஸ் செயல்திட்டத்தை மேலும் விரிவாக்கவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். இதன் காரணமாக முதன்முறையாக பலவற்றை பிரிக்ஸ் சாதித்தது. முதல் முறையாக டிஜிட்டல் பிரிக்ஸ் உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுகாதார அணுகலை அதிகரிப்பதற்கான புதுமையான நடவடிக்கை இதுவாகும். வரும் நவம்பர் மாதத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் கீழ் நமது நீர்வள அமைச்சர்கள் முதல் முறையாக சந்திக்க உள்ளார்கள். 'பல்முனை அமைப்புகளை வலுப்படுத்தி, சீர்திருத்துவதற்கான கூட்டு நிலை'-யையும் முதல் முறையாக பிரிக்ஸ் எடுத்துள்ளது.

பிரிக்ஸ் தீவிரவாத எதிர்ப்பு செயல் திட்டத்தையும் நாம் நிறைவேற்றியுள்ளோம். நமது விண்வெளி முகமைகளுக்கு இடையேயான தொலைதூர உணர் செயற்கைக் கோள்களின் கூட்டு (Remote Sensing Satellite Constellation) ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. நமது சுங்கத் துறைகளுக்கு இடையேயான கூட்டின் மூலம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் எளிதாக நடைபெறும். மேலும், மெய்நிகர் பிரிக்ஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்குவதிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பசுமை சுற்றுலாவுக்கான பிரிக்ஸ் கூட்டு மற்றுமொரு புதிய முன்முயற்சியாகும்.

மாண்புமிகு தலைவர்களே,

இந்த அனைத்து முயற்சிகளும் நமது மக்களுக்கு பயனளிப்பதோடு மட்டுமில்லாமல், எதிர்வரும் வருடங்களிலும் முக்கியத்துவம் பொருந்திய அமைப்பாக பிரிக்ஸ் விளங்குவதற்கு வழிவகுக்கும். பிரிக்ஸ் அமைப்பை இன்னும் பயனுள்ளதாக ஆக்குவதற்கான சரியான பாதையில் நாம் செல்வதற்கு இன்றைய கூட்டம் வழிகாட்டும் என்று நான் நம்பிக்கையோடு உள்ளேன்.

சர்வதேச மற்றும் பிராந்தியம் குறித்த முக்கிய விஷயங்களையும் நாம் ஆலோசிக்க உள்ளோம். தொடக்க உரைகளுக்காக உங்கள் அனைவரையும் நான் தற்போது வரவேற்கிறேன். என்று பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையில் பேசினார்.

Tags:    

Similar News