மியான்மரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெய்ன் மாகாணத்தில் கரேன் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் பெருவாரியாக வசித்து வருகின்றனர். இவர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுயாட்சி கோரி மியான்மர் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து கரேன் இன மக்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.அதேவேளையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வரும் 'கரேன் தேசிய விடுதலை ராணுவம்' என்கிற கொரில்லாப் படை ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி கெய்ன் மாகாணத்தில் தாய்லாந்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள முட்ரா மாவட்டத்தில் ராணுவ விமானங்கள் கடந்த சனிக்கிழமை மாலை வான் தாக்குதல் நடத்தின.இதன் தொடர்ச்சியாக மியான்மர் தாய்லாந்து எல்லையில் சால்வீன் ஆறு பகுதியில் உள்ள கிராமங்கள் மீது நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
குண்டு வீச்சு குறித்த அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் சால்வீன் ஆற்றை கடந்து தாய்லாந்துக்கு தப்பிச்சென்றனர். தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள மே ஹாங் சான் மாகாணத்தில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மியான்மரில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ளதாக தாய்லாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.