ஈழத்தமிழர்களுக்காக குரல் காெடுத்த ஆயர் இராயப்பு யோசப் காலமானார். அவருக்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வெளியிட்ட இரங்கலில் கூறியுள்ளதாவது,ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான பயணத்தில் தனது ஆன்மீகப் பணிநிலையில் இருந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று தொண்டாற்றிய மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு யோசப் ஏப்ரல் 1 ம் தேதி அன்று காலமானார் என்ற செய்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தனது ஆன்மீகப் பயணத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்ற வேளையில் தொடர்ச்சியான போர்ச்சூழலும் மக்களின் இடப்பெயர்வுகளும் இயல்புநிலை பாதிக்கப்பட்ட ஓர் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தன. மக்கள் பல அவலங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்த நிலையில் ஆயர் தனக்குரிய அருட்பணிகளை மேற்கொள்வதில் பல சவால்களை எதிர்கொண்டார்.
இந்த நெருக்கடிக்குள் திருஅவையின் பணிகளையும் மக்களின் இடர்நீக்கும் வேலைத்திட்டங்களையும் ஒருங்கே ஆற்ற வேண்டிய தேவையையும் ஆயர் உணர்ந்திருந்தார். திரு அவையின் ஆன்மீக வழியில் நின்றுகொண்டு, ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து, முரண்பட்ட இரு தத்துவங்களின் செல்நெறிகளிலுள்ள சிக்கல்களை மிக ஆழமாகப் புரிந்துகொண்டு ஒன்றுக்கொன்று முரண்படாமல் அதனதன் தனித்துவத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டிய மிகச்சிக்கலான பணியை ஆயர் மிக நேர்த்தியாக, ஆரவாரமின்றிக் கையாண்டார். அவ்வகையில், திருஅவையின் வரையறைகளுக்குள் நின்றவாறு மக்களின் பாதுகாவலனாகப் பணியாற்றும் ஒரு விடுதலை இறையியல் நெறியைத் தனதாக்கிக் கொண்டு ஆயர் செயற்பட்டார் என்பதே அவரது தனித்தன்மையாக அமைந்துள்ளது.
கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரப் படிமுறையில் உயர்நிலைப் பொறுப்பொன்றை வகித்துக் கொண்டிருந்த நிலையில், தனது ஆன்மீகப் பணியோடு மக்கள் மேல் நிகழ்த்தப்பட்ட மனிதவுரிமை மீறல்களைப் பயமின்றியும் தயக்கமின்றியும் வெளிப்படுத்திய ஆண்டகையின் முன்னுதாரணம்,உலகளவில் மிகக்குறைவே. தென்னாபிரிக்கா, கிழக்குத் தீமோர் விடுதலைப் போராட்டக் காலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றிய ஆயர்களைப் போல இவரின் பங்களிப்பும் உயர்ந்த இடத்தில் வைக்கப்படும். இன்றுவரைக்கும் தமிழர்களுக்கான நீதிப்பயணத்தில் ஏற்பட்டுள்ள சிறுசிறு வெற்றிகளுக்கு ஆயரின் சாட்சியமும் செயற்பாடும் அடிக்கல்லாய் அமைந்துள்ளது.
பேரழிவின் விளைவாக துவண்டுபோன நிலையில் மக்களின் அரசியற் பயணம் தளும்பத் தொடங்கிய வேளையில் எங்கள் இனத்தின் அரசியல் வேட்கையை இறுக்கிப்பிடித்துப் புடம்போட்டுப் பயணிக்க வைப்பதில் அரும்பங்காற்றினார். ஒன்றுதிரண்ட அரசியற் சக்தியாகத் தமிழ்மக்களின் அரசியலைத் தீர்மானிக்க வேண்டுமென்ற அவாவோடு அவர் இறுதி மூச்சுவரைப் பணியாற்றினார். மதத் தலைவர்களும் சிவில் சமூகமும் அரசியல் விழிப்புணர்வோடு மக்களை வழிநடத்த வேண்டிய தேவையை முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டிய ஆயரின் மறைவில் துயருற்றிருக்கும் கத்தோலிக்க மதபீடம், குருமார்கள், மக்கள் அனைவரின் துயரிலும் நாம் பங்கு கொள்கின்றோம். தனது இறுதி மூச்சுவரை தமிழ்மக்களின் நீதிக்காகவும் அரசியல் விடிவுக்காகவும் சிந்தித்துச் செயற்பட்டுக்கொண்டிருந்த ஆயரின் கனவு நிச்சயம் ஒருநாள் நனவாகும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.