Israel Hamas War Live Updates காசா தாக்குதல் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
"காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
Israel Hamas War Live updates இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்று சனிக்கிழமை 8-வது நாளை எட்டியுள்ள நிலையில் இருதரப்பிலும் சேர்த்து 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், "காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
காசா நகரம் வடக்கு காசா, காசா, மத்திய பகுதி, கான் யூனிஸ் மற்றும் ரஃபா என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலம் வழியாக வடக்கு மற்றும் கிழக்கில் எல்லையாக இஸ்ரேலும், தெற்கில் எகிப்தும் எல்லையாக உள்ளன. இந்த இரண்டுமே தற்போது மூடப்பட்டுவிட்டன. காசாவின் மேற்கில் மேற்கு கடற்கடரை என அழைக்கப்படும் மத்திய தரைக் கடல் உள்ளது. இதுவும் மூடப்பட்டுவிட்டது.
காசாவின் வான்வெளி ஏற்கனவே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. காசா விமான நிலையமும் 2002-ல் இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்டுவிட்டது . எனவே, முற்றிலும் துண்டிக்கப்பட்ட பகுதியாக காசா முனை உள்ளது. 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட குறுகிய நிலப்பரப்பு கொண்ட காசாவில், மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கிறார்கள். உணவு, எரிபொருள், மருந்துகள், குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கிட்டத்தட்ட இஸ்ரேலையே நம்பியுள்ளனர். மேலும் சர்வதேச உதவிகள் குறைந்த அளவிலேயே கிடைத்து வருகின்றன.
இஸ்ரேல் 24 மணி நேரம் கெடு விதித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட காசாவிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் துடிக்கும் அப்பாவிப் பொதுமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்திவருகின்றனர். கடைசி சொட்டு ரத்தம் சிந்தப்படும் வரை போர் தொடரும் என்று கூறி மக்களை வெளியேற வேண்டாம் எனக் கோரி வருகின்றனர். அதையும் மீறி மக்கள் தெற்கு நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக 120 இஸ்ரேலியர்களை பிடித்துவைத்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் நேற்று மீட்டனர். அப்போது 60 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மேலும் 120 இஸ்ரேலியர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களும் மீட்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில், "ஹமாஸ் தாக்குதலில் 1300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடிதான் காசா மீதான தாக்குதல். இதுதொடக்கம் தான் இன்னும் தரைவழித் தாக்குதல் இருக்கிறது. காசா எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான வீரர்கள் விரைந்துள்ளனர். இனி என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இதுதான் தொடக்கம் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். இஸ்ரேல் மீதான தாக்குதலை நாங்கள் மன்னிக்கப் போவதில்லை. யூத மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை இந்த உலகம் மறக்கவிடமாட்டேன். எதிரிகளை எல்லையில்லா சக்தி கொண்டு எதிர்கொள்வோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.