இலங்கை நேத்ரா தொலைக்காட்சியில் தமிழில் சாதனை படைக்கும் நிருபிதாபொன்னுத்துரை

கலப்பில்லாத தமிழை இன்றைய தலைமுறையினர் நிருபிதா பொன்னுத்துரையால் இலங்கை நேத்ரா தொலைக்காட்சியில் கேட்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.

Update: 2021-07-06 18:14 GMT

 நிருபிதா பொன்னுத்துரை

அன்றாட வாழ்க்கையில் நம்முடைய பேச்சு வழக்கில், ஆங்கிலம் கலக்காமல் பேசுவது பெரும் சவாலாக  உள்ளது. இன்றைய சூழ்நிலையில், முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "ஆங்கிலம் கலக்காத தமிழில்" சிறப்பாக தொகுத்து வழங்குவது எவ்வளவு சவாலான விஷயம்.

ஆங்கிலம் தவிர்த்து, தமிழில் சிறப்பான நிகழ்ச்சியை வழங்குகிறது இலங்கை அரசின்பிரதான தொலைக்காட்சியான நேத்ரா அலைவரிசை. இது அதிக பார்வையாளர்கள் கொண்டது குறிப்பிடத்தக்கது. அதில் இலங்கை அரசின் பிரதான தொலைக்காட்சியான நேத்ரா அலைவரிசையில் அறிவிப்பாளராக பணி செய்யும் நிருபிதா பொன்னுத்துரையை பற்றி கேட்க வியப்பாக இருந்தது.

பல சவால்களை தாண்டி இலங்கை ஊடகத்துறையில் தடம் பதிக்கும் பன்முகத்திறன் கொண்ட நிருபிதாவிடம் இது பற்றி தொடர்பு கொண்டு பேசினோம். இலங்கை பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, நாம் பேசும் தமிழுக்கும், அவர்கள் பேசும் தமிழுக்கும் வழக்கு சொற்கள் நிறைய மாறுபடும்.

பெண் பத்திரிக்கையாளர் நிருபிதாவிடம், கலப்பில்லாத தமிழை இன்றைய தலைமுறையினர் உங்களால் கேட்கின்றனர் என்பது மகிழ்ச்சியான விஷயம். இதற்காக வாழ்த்துக்களையும் நன்றியையும் உங்களுக்கு முதலில் தெரிவித்து கொள்கிறோம். உங்கள் இந்த முயற்சியை தமிழுக்கு செய்யும் தொண்டாக நாங்கள் நினைக்கிறோம் என்று கூறியபோது,

நாம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றோமோ இல்லையோ, அதனுடைய வீழ்ச்சிக்கு எந்தவிதமான காரணத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது. இதுவே போதுமானது. என்னை பொறுத்தவரையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பங்காற்றியதை விட அதனது வீழ்ச்சிக்கு பங்காற்றாமல் இருக்கின்றேன். இதை கடைசிவரை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறேன் என்றார். இந்த இளம் வயதில் அவரது பேச்சில் தெளிவும் உறுதியும் தெரிந்தது.

உண்மையில் சொல்ல போனால் ஆங்கிலமொழி கலக்காத உரையாடல் என்பது சாத்தியமில்லை என்று நாம் நினைக்கிறோம் . இப்போது நாம் பேசும்போதும் எப்படியோ ஒரு சிறிய ஆங்கில சொல்லாவது வந்துவிடும். பல்கலைக்கழகம் வரைக்கும் நீங்கள் படித்தது ஆங்கிலம் என்பதாலும்,   கொழும்பிலே நீங்கள் வாழ்வதாலும் நடைமுறை வாழ்கையில் எப்படியாவது ஆங்கிலம் வந்துவிடும். அதையும் தாண்டி நிகழ்ச்சிகளில் தனித் தமிழை எவ்வாறு நீங்கள் பேசுகின்றீர்கள் என கேட்டோம்.

அதற்கு  நிருபிதா பொன்னுத்துரை நம்மிடம் தெரிவித்ததாவது :

நான் நினைக்கின்றேன் நாம் வாழும் இடமே காரணம் என்று. இதேநேரம் இலங்கை தமிழ் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் யாழ்ப்பாண தமிழ் பிடிக்கும் என சொல்வர். அவ்வாறு பார்க்கும்போது நான் ஆங்கிலம் கலந்து பேசாமல் இருப்பதற்கு காரணம் மொழிவளம் என நினைக்கின்றேன். தொலைக்காட்சியிலே இருப்பதால் எனக்கு மொழிவளம் சிறப்பாக இருப்பதாக சிலர் கூறுவர். ஆனால் அது அவ்வாறு அல்ல. எனக்கு மொழிவளம் இருப்பனால்தான் நான் தொலைக்காட்சி அறிவிப்பாளராக இருக்கின்றேன். அதற்காக நான் சங்ககால தமிழில் கதைப்பதுமில்லை. எனக்கு எப்போதும் பேசும்போது லகர ளகரம் சரியாக இருக்க வேண்டும். என்னை விட இன்னும் பல சிறந்த லகர ளகரம் சரியாக உச்சரிக்கும் அறிவிப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களை கண்டு நான் வியந்ததுண்டு.

அவர்களைப்போல் நானும் அதில் கவனமாக இருக்கின்றேன். ச் எனும் எழுத்து வரும் இடங்களில் அதனை முறையாக பாவிக்க வேண்டும். அதற்காக கஸ்டப்பட்டு தமிழ் பேசுவதில்லை. எனக்கு அது சரளமாக வருகின்றது. அதற்கும் நான் பிறந்த இடம் வளர்ந்த இடம் மற்றும் இருக்கும் சூழலே காரணம்.


இதேநேரம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா அலைவரிசையினை பொறுத்தவரை நான் பகுதி நேர அறிவிப்பாளராக இருக்கின்றேன். ஆனாலும் அந்த நேரத்தில் ஆங்கில மொழியை உட்புகுத்திவிடக்கூடாது என்பதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எல்லாம் மிக கவனமாக இருந்தார்கள். இப்போதும் அப்படித்தான். அதற்காக ஏனைய வானொலி தொலைக்காட்சிகளை குறை கூறவில்லை. ஆங்கில மொழியை சரளமாக கலந்து பேசுவார்கள். அது அவர்களது விசேட தன்மையாக இருக்கலாம்.

தொலைக்காட்சி அறிவிப்பு துறையிலே பணியாற்றும்போது பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. நேத்ரா அலைவரிசையினை பொறுத்த மட்டில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை விட நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளே அதிகம். அதிலும் தொலைபேசி உரையாடல் ஊடாக பாடல் வழங்கும் நிகழ்ச்சி செய்வது நான் குறைவு. அவ்வாறு ஓரிரு தடவைகள் நான் செய்துள்ளேன். அதையும் தாண்டி அதிதிகளுடனான நேர்காணல் நிகழ்வுகளை அதிகமாக செய்திருக்கின்றேன். மற்றும் தலைப்புக்களை கொடுத்து உரையாடல் செய்வது போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். இதில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். காலை நேரத்தில் தலைப்பை கொடுத்து உரையாடல் செய்யும் நிகழ்ச்சியில் சிலர் அழைப்பார்கள். ஒரு மணி நேர நிகழ்விற்கு இரு தொகுப்பாளர்கள் இருப்போம். அதில் அவர்கள் தலைப்பிற்கான ஆழமான கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதில் சில ரசிகர்கள் எம்மோடு நீண்ட காலமாக தொடர்ந்து உரையாடல் மேற்கொள்பவர்களாக இருப்பர். அவர்களால் பேச முடிந்த தலைப்பு வரும்போது எங்களால் வெட்டி எடுக்க முடியாதபடி தொடர்ந்து 15 நிமிடத்திற்கு பேசுவார்கள். இந்நிலையில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இடைநடுவே குறுக்கீடு செய்து பேசுமாறு இயர் போன் மூலமாக கூறுவார்கள். ஆனாலும் சில நேரங்களில் ஒன்றுமே செய்ய முடியாத நிலை தோன்றும். இந்நிலையில் தயாரிப்பாளர் சொல்வதையும் தலையசைத்து உள்வாங்கிய வண்ணம் தொடரும் சுவாரசிய அனுபவங்கள் நிறைய உள்ளது.

அத்தோடு அதிதிகளுடனான நேர்காணலில் சில அதிதிகளுடன் முன்னதாகவே பேசி அவர்களிடம் கேட்கப்போகும் கேள்விகள் மற்றும் அதை தாண்டிய வினாக்கள் ஏதும் உள்ளதாக எனவும் அவர்களிடம் கேட்போம்.

இந்த நேர்காணல் 30 நிமிடங்கள் வரையானதாக அமையும். ஆனால் எல்லாம் வினாக்களும் தயார்படுத்திய பின்னர் கேள்விகள் கேட்கும்போது சில அதிதிகள் ஒரு கேள்விக்கு 30 நிமிடங்கள் பதிலளிப்பர். சில அதிதிகள் ஒற்றைக்கேள்விக்கு ஒற்றைப் பதிலளிப்பர். அவ்வாறு நடந்தால் அவர்களிடம் கேட்கும் 12 வினாக்களுக்குமாக விடைகள் 10 நிமிடத்தில் வழங்கப்படும். இதன் பின்னர் நேரத்தை கருத்தில் கொண்டு வேறு சில வினாக்களும் கேட்க வேண்டிய நிலை உருவாகும். இதற்கான சரியான பதில்கள் அவர்களிடத்தில் இருந்து வராதவிடத்து பல சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். இப்படி பல சுவாரசியமான சம்பவங்கள் உள்ளது.

நான் நிறைய தமிழ் புத்தகங்களை வாசிப்பேன். எனது உயர்தர கல்வியிலும் தமிழ் பாடத்தை ஒரு பாடமாக கற்றேன். எனவே எனக்கு மொழி மீது பற்றிருக்கிறது. ஆனால் பற்று வேறு பித்து வேறு. பித்துப்பிடித்தவர்கள் வேறு சில விடயங்களை சொல்வார்கள். ஆனால் நான் அவ்வாறு அல்ல. எப்படி நாம் எல்லா மதங்களையும் ஆதரிக்க வேண்டும் என்று சொல்வார்களோ அதுபோல் எல்லா மொழிகளையும் ஆதரிப்பவள். நான் பல தமிழ் விவாத போட்டிகள் பட்டி மன்றங்கள் போன்வற்றில் பங்கேற்று கொள்வேன். ஆகவே என்னிடம் உள்ள தமிழை நான் காத்து வந்துள்ளேன். அதுதான் நான் தமிழ்மொழிக்காற்றிய பங்கு என்று சொல்வேன்.

என்னுடைய துறை என சொல்லும் போது அறிவிப்பும் சட்டமும் எனது இரு கண்கள். ஆனாலும் நான் ஆரம்பத்தில் அறிவிப்பு துறைக்கு வரும்போது எனது குடும்பத்திற்கு அவ்வளவு விருப்பமில்லை. அதுபோல் சட்டமும் விருப்பமில்லை. ஏனெனில் பெண் பிள்ளை எனும் அளவிலே அதனை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. ஆனாலும் எனது குடும்பத்தில் ஒரு பண்புள்ளது. தங்களது அபிப்பிராயங்களை சொல்வார்களே தவிர அதனை திணிக்க மாட்டார்கள். அந்த விதத்தில் நான் கொடுத்து வைத்தவள். அபிப்பிராயம் சொல்லும் உரிமை குடும்பத்திற்கு உள்ளது. அது உண்மையிலே ஒரு குடும்பத்தின் கடமை. அறிவிப்பு துறை மற்றும் சட்டத்துறையிலே பெண்ணான எனக்கு ஏற்படும் அசௌகரியங்களை பற்றி சொன்னார்கள்.

அது தொடர்பான விளக்கத்தை நான் சொன்ன பின்னர் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது நான் செய்யும் ஒவ்வொரு விடயத்தையும் நன்றாக உணருகின்றார்கள். சில நேரங்களில் இரவு வேளையில் கூட நிகழச்சிகளை தொகுத்து வழங்கும் நிலைமை உருவாகும். அந்த நேரத்தில் அவர்கள் எனக்கு மிக ஆதரவாக இருப்பார்கள்.

சட்டம் அல்லது அறிவிப்பு என்பதையும் தாண்டி நான் தனியாக கொழும்பிலே இருக்கின்றேன். தனியாக வேலை பார்க்கின்றேன். ஆகவே வீட்டில் உள்ளவர்களுக்கு முதலில் நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கை எனது குடும்பத்திற்கு உள்ளது. நான் எங்கு சென்றாலும் செல்லும் விடயங்களில் தனியாக சாதித்துவந்து விடுவேன். அல்லது தப்பான பாதைகளிலோ அல்லது தப்பாகவோ என்னை யாரும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு நான் செல்லமாட்டேன் எனும் நம்பிக்கை எனது குடும்பத்திற்கு உள்ளது. எனது தேவைகளை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்கள் இருக்கிறார்களோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு நல்ல குடும்பம் உள்ளது. ஆகவே குடும்பம் எனக்கு கிடைத்த வரம், பரிசு என்றே சொல்வேன். எனது இந்த நிலைக்கு காரணமும் அவர்களே.

எனது இலட்சியம் ஊடகமும் சட்டமும் என்றே சொல்வேன். நான் கடந்த வருடங்களாக ஊடகத்துறையில் உள்ளேன். விரைவில் பரீட்சையினை


நிறைவு செய்து சட்டத்தரணியாகவும் வந்து விடுவேன். இதுதான் எனது இலட்சியம். அதுபோல் ஊடகத்துறையில் எதையாவது சாதித்துவிட வேண்டும். ஆனாலும் ஊடகத்துறையில் இக்காலத்தில் முழுமையாக தங்கிவாழ முடியாது. அப்படி வாழ வேண்டும் என்றால் நிறைய சவால்களை சந்திக்க வேண்டும். அப்படியான சவால்களுக்கு முகம்கொடுக்கும் போது அந்த இடத்தில் நாம் நிலைத்திருக்க முடியாது. ஆகவே ஊடகத்துறைக்கு வரும்போது எனது அபிப்பிராயம் பகுதியளாவாக இருக்க வேண்டும் என்பதே. எனது கற்கைகளும் தொழிலும் வேறாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.

நான் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து சட்டத்துறையினை பயின்று கொண்டிருக்கின்றேன். வேறு இடத்திலும் வேலை செய்து கொண்டிருந்தேன். இந்த நிலையில் ஊடகத்துறையில் 10 வருடங்கள் கடமையாற்றியும் எதனையும் சாதிக்க முடியவில்லை எனும் கவலை எனக்கு இருக்கின்றது. பலர் சொல்வார்கள் உனது குரல் நன்றாக இருக்கின்றது. நீங்கள் நிறைய விடயங்கள் சாதிக்க வேண்டும். ஊடகத்துறையில் நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது. ஆனாலும் அந்த காலம் வரவில்லை என்பதே எனது கவலை. ஆகவே முன்னைய அறிவிப்பாளர்கள் போல் ஊடகத்துறையில் சாதித்து ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போன்று தமிழுக்காக நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் நான் கல்வி கற்ற மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழ் இலக்கிய மன்றத்தில் சில நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம். அங்கிருந்து வெளியேறினாலும் வருடாவருடம் அங்கு நடைபெறும் நாடகம் மற்றும் விவாத போட்டிகளில் பங்கேற்று கொண்டிருக்கின்றோம். அதுபோல் இணையங்கள் மூலமான பல அமைப்புக்களில் தமிழ் மொழி மூலமான நிகழ்வுகளுக்கு உதவி செய்துள்ளேன். ஆகவே என்னிடம் உள்ள தமிழ்மொழியை பாதுகாத்து வருவதே தமிழ் மொழிக்கு நான் ஆற்றிவரும் எனது பங்கு என்று சொல்வேன் என்று தெரிவித்தார்.

நிருபிதா பொன்னுத்துரை பிறந்த இடம் இலங்கையின் நெடுங்கேணி. நான்கு வயது வரை அம்மாவின் சொந்த ஊரான முல்லைத் தீவு ஒட்டுச்சுட்டன்னில் வளர்ந்தவர். பின்னர் அந்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண போர் சூழ்நிலை காரணமாக 1999 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து வவுனியாவிற்கு வந்துள்ளார்.

இவரது ஆரம்ப கல்வியினை வவுனியாவில் ஆரம்பித்தார். உயர்கல்வி பட்டப் படிப்பினை கொழும்பு மொறட்டுவ பல்கலைகழகத்தில் படித்துள்ளார்.

பட்டினமும் நாடும் நகரத் திட்டமிடலும் என்னும் கட்டிட வடிவமைப்பு கலையின் கீழ் வருகின்ற துறையை தேர்வு செய்து பட்டப் படிப்பினை பூர்த்தி செய்துள்ளார். அதன் பின்னர், சமுகவியல் மாஸ்டர் பட்டப் படிப்பினை கொழும்பு பல்கலைகழகத்தில் பயின்றுள்ளார். தற்பொழுது ஊடகத்துறையில் பணி செய்துகொண்டு, இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறார்.

அவரிடம் சட்டம் பயில்வது உங்கள் கனவா என்று கேட்டதற்கு, சட்டம் எவ்வாறு எனது கனவோ அதேபோல் அறிவிப்பாளராக வரவேண்டும் என்கின்ற கனவும் என்னுள் இருந்தது. ஆனால் ஒரு தொலைகாட்சி அறிவிப்பாளராக வருவேன் என்பதை நான் எதிர்பார்க்க வில்லை. பல்கலைக் கழகத்திற்கு தேர்வாகி கொழும்பிற்கு வந்த பின்னர், முயற்சித்து பார்ப்போம் என்று இருந்த நேரத்தில், இலங்கை ரூபாவாகிணி கூட்டுத்தாபனத்தில் தொலைகாட்சி அறிவிப்பாளர்களிக்கான விண்ணப்பம் கோரி இருந்தார்கள்.

நானும் விண்ணப்பித்தேன். பின்னர் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது. நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்டேன். எனது முதல் நிகழ்வாக 2013 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றினை நேத்ரா அலைவரிசையினூடாக தொகுத்து வழங்கினேன். அப்போது ஆரபித்த பணி இன்று வரை தமிழுக்கும், தமிழ் கூறும் நல்லுலகிற்கும் மனநிறைவாக பணி செய்து வருகிறேன் என்றார்.

Tags:    

Similar News