சிஓபி மாநாடு: பருவநிலை பாதிப்புக்கான இழப்பீடு நிதி வழங்க ஒப்புதல்

வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாக, காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவ வளர்ந்த நாடுகள் பணம் செலுத்த ஒப்புக்கொண்டன;

Update: 2022-11-21 04:08 GMT

ஐ.நா பருவநிலை மாற்றத்தின் 27-வது மாநாடு (சிஓபி 27) எகிப்தில் நடைபெற்றது. பருவநிலை மாற்ற பாதிப்புகளை சமாளிக்க புதிய நிதி தொகுப்பை உருவாக்கவேண்டும் என ஏழை நாடுகள் மற்றும் இந்தியா உட்பட வளரும் நாடுகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன.

ஆனால், இது குறித்த திட்டம் சிஓபி-27 வரைவு அறிக்கையில் இடம் பெறாமல் இருந்தது. மாநாட்டில் பங்கேற்று பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ''சிறு விவசாயிகளுக்கு வேளாண்மை முக்கிய வாழ்வாதரமாக உள்ளது. பருவநிலை மாற்ற பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்படுவர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் இதர பாதிப்புகள் விவசாயிகளுக்கு சுமையாக இருக்க கூடாது'' என்றார்.

இதையடுத்து பருவநிலைமாற்ற பாதிப்புக்கான இழப்பீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாநாட்டில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறுகையில் இந்த சிஓபி மாநாட்டில் பருவநிலை மாற்ற பாதிப்புக்கு இழப்பீடுகளுக்கு நிதி தொகுப்பை ஏற்படுத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதைத்தான் உலக நாடுகள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தன.

இந்த விஷயத்தில் ஒருமனதான முடிவு எடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பருவநிலை மாற்றத்தில் வளர்ந்த நாடுகள் முன்னணியில் உள்ளன. பருவநிலைமாற்றத்துக்கு தீர்வு காணும் வகையிலான வாழ்க்கை முறைக்கு மாற முடிவெடுத்துள்ளதையும் வரவேற்கிறது இந்தியா. நீடித்த இலக்குகளை அடைய வளரும் நாடுகளுக்கு எரிபொருட்களை கலந்து பயன்படுத்தும் சுதந்திரம் தேவை என்று கூறினார்.

இருப்பினும், எந்த நாடுகள் இந்த நிதிக்கு நிதியுதவி வழங்க வேண்டும் மற்றும் அதிலிருந்து பயனடைய தகுதியுடையவை என்ற முக்கியமான கேள்விகள் எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கு விடப்பட்டுள்ளன.

இந்த நிதியை யார் நிர்வகிப்பார்கள், பெரிய வளரும் நாடுகளில் இருந்து பங்களிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறதா மற்றும் பங்களிப்பாளர்களின் நியாயமான பங்கு என்னவாக இருக்கும் என்பது போன்ற முக்கியமான கேள்விகள், நிதியை உண்மையாக ஏற்றுக்கொள்வதற்கு பரிந்துரைகளை வழங்கும் "இடைநிலைக் குழுவிற்கு" விடப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News