சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் குழு
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் திங்கள்கிழமை அதிகாலை நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-6 பணியை முடித்து, புளோரிடாவின் ஜாக்சன்வில்லி கடற்கரையில்பத்திரமாக இறங்கியது;
விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து அமைத்து உள்ளன . அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும். கடைசியாக கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு-7 உடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இதில் நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கமாண்டர் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர் மற்றும் பைலட் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் பயணித்தனர்.
இந்நிலையில் குழு-7க்கு முன்னதாக அனுப்பப்பட்ட குழு-6 இன் பணிக்காலம் முடிவடைந்ததால் அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணி இன்று நடைபெற்றது. இந்த பணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட குழு-6 விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன், ஆண்ட்ரி பெட்யாவ், சுல்தான் அல் நெயாடி மற்றும் வாரன் ஹோபர்க் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.