வங்காள தேசத்தில் ராணுவ ஆட்சி: இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் பிரதமர் ஷேக் ஹசீனா
வங்காள தேசத்தில் ராணுவம் ஆட்சியை பிடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.;
நமது அண்டை நாடுகளில் ஒன்று வங்காள தேசம்.இந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்தவர் ஷேக் ஹசீனா. இவர் கடந்த 1971ம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் உருவாக்கி கொடுக்கப்பட்ட வங்காள தேச நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்த ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார்.
வங்காள தேசத்தில் 1971 சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட காலம் அமலில் இருந்து வந்தது. இடையில் கோர்ட்டு உத்தரவின்படி இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஷேக் ஹசீனா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனதும் மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இதற்கு எதிராக அங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இந்த போராட்டம் பெரிய கலவரமாக மாறியது. இந்த போராட்டத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் நடந்தது கடந்த சில நாட்களுக்கு முன்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் மீண்டும் வெடித்தது. ஏற்கனவே நடந்த கலவரத்தில் உயிரிந்தவர்களுக்கு நீதி கேட்டு நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். நாடே கலவரத்தில் சிக்கியது.
இந்த நிலையில் இன்று திங்கட் கிழமை போராட்டத்தை சமாளிக்க முடியாமல் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். இதனை இராணுவத் தலைவர் வாக்கர் உஸ் ஜமான் உறுதிப்படுத்தினார். இடைக்கால அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும் என்று கூறினார். இதன் மூலம் வங்காள தேசத்தில் ராணுவ ஆட்சி ஏற்பட்டு உள்ளது.
இன்று (5ம் தேதி)திங்கட்கிழமை மதியம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்ப்பாளர்கள் தாக்கியதாக சேனல் 24 தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் கட்டிடத்தை சூறையாடி கோழி, மீன் மற்றும் காய்கறிகளை எடுத்துச் செல்வதை டிவி படங்கள் காட்டின.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவின் அகர்தலாவில் உள்ள திரிபுரா தலைநகரில் தஞ்சம் அடைந்தார்.பின்னர் அவர் இந்திய ஆதரவுடன் லண்டனுக்கு செல்ல உள்ளார்.
சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு முறைக்கு எதிராக ஷேக் ஹசீனா தனது அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தனியார் ஜமுனா தொலைக்காட்சி செய்தி சேனல் தெரிவித்தது.
ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காள தேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது முதல் முறை அல்ல. ஏற்கனவே இது போல் பல முறை ராணுவ ஆட்சி நடந்து இருக்கிறது. ராணுவ தளபதியாக இருந்த எர்ஷாத் என்பவர் அங்கு நீண்ட காலம் ராணுவ ஆட்சி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.