மைக்கேல் ஜோர்டான் காலணிக்கு இத்தனை கோடியா?
ரூ. 66 கோடிக்கு ஏலம் போன அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரரான மைக்கேல் ஜோர்டான் பயன்படுத்திய 6 ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூக்கள்;
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரரான மைக்கேல் ஜோர்டான் பயன்படுத்திய 6 ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் ஏறத்தாழ இந்திய மதிப்பில் 66 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக அமெரிக்காவின் சதபி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய பொருள்களுக்கு அவர்களின் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும். ஏர் ஜோர்டான் மாடல் ஷூக்களான இவற்றை ஜோர்டான் 1991, 1992, 1993, 1996, 1997 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளின்போது சாம்பியன்ஷிப் போட்டிகளில் அணிந்து இருந்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இவை விலை போயுள்ளன. மைக்கேல் ஜோர்டான் இந்த உலகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் குறியீடாகவும் அவரது புகழின் குறியீடாகவும் இது அமைவதாக சதபி தெரிவித்துள்ளது.
யார் வாங்கியது என்பது குறித்த தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை. நிர்வாகியிடம் ஜோர்டான் 1991 போட்டியில் வெற்றி பெற்றதும் அவரது ஷுவை ஒப்படைத்துள்ளார். பின்னர் இது ஒவ்வொரு போட்டியின் பின்னும் அப்படியே தொடர்ந்துள்ளது.
5 முறை மதிப்புமிக்க வீரர் விருது, 2 முறை ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற ஜோர்டான் கூடைப்பந்தாட்ட விளையாட்டுக்கே ஒரு தரத்தை நிர்ணயித்தவர் என புகழாரம் சூட்டி, மதிப்புமிக்க வீரர் விருது பின்னர் அவரது பெயரிலேயே மாற்றப்பட்டது.
அதிகபட்ச விலைக்கு போனதாக சொல்லப்படுவது ஜோர்டனின் ஜெர்ஸி தான். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 10.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அது விலைபோனது.
அவர் 1984-ல் அறிமுகமான போட்டியில் கலந்து கொள்வதற்கான டிக்கெட் 4.68 லட்சம் டாலருக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.