இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்புக் காரணங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகளுக்கான அவசர ஆணை ஏப்ரல் 6 ம் தேதி முடிவடையும். ஏப்ரல் 7 முதல் புதிய ஆணை நடைமுறைக்கு வரக்கூடிய அறிவிப்பில், இந்த மாத தொடக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் மாறுமா என்பது எதிர்பார்பாக உள்ளது.
இத்தாலியின் அனைத்து பகுதிகளும் தற்போது சிவப்பு அல்லது ஆரஞ்சுபிரதேசங்களாகவும், உயர் கட்டுப்பாடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த நிலை ஈஸ்டர் கொண்டாட்ட காலங்களான ஏப்ரல் 3 முதல் 5 ஆம் தேதி வரை மேலும் இறுக்கமாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிடவுள்ள சமீபத்திய வாராந்திர நிலைமை அறிக்கைத் தரவின் அடிப்படையில், நாட்டின் எந்தப் பகுதிகள் எந்த மண்டலங்களுக்குள் வரும் என்பதை அரசாங்கத்தால் ஒரு திட்டத்தை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.