இலங்கை கார் பந்தய போட்டியில் பார்வையாளர்கள் மீது மோதிய ரேஸ் கார்!
இலங்கை தியாதலாவா பகுதியில் கார் பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது, கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.;
இலங்கையில் நடந்த கார் பந்தய போட்டியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டம் தியாதலாவா பகுதியில் கார் பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது, ரேஸ் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் மீது மோதியது.
இந்த துயர சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கை காவல்துறை தரப்பு கூறுகையில், "ஐந்து ஆண்களும் ஒரு சிறுமியும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் நான்கு பேர் பந்தய நிகழ்வில் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்தவர்கள். மேலும் இருவர் பார்வையாளர்களிடையே இருந்த பொதுமக்கள்" என்று கூறினார். விபத்து குறித்து இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "உயிரிழந்த சிறுமிக்கு 8 வயதாகிறது" என்றார்.
பந்தய போட்டியில் ரேஸ் கார் ஒன்று ஓடுபாதையில் விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக தியாதலாவா பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மற்ற அனைத்து கார் பந்தய போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தியாதலாவா காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
தெற்காசிய நாடுகளில் இம்மாதிரியான கார் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கார் பந்தய போட்டியின்போது தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடுமையான விதிகள் பின்பற்றப்படும். ஆனால், தெற்காசிய நாடுகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை என தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.