ஆலோவீன்: பேய்கள் மத்தியில் ஒரு கொண்டாட்டம்

மூட நம்பிக்கைகள் என்பது நினைவிற்கு எட்டாத காலந்தொட்டே, மனிதர்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்து வந்து கொண்டிருக்கிறது.;

Update: 2024-02-18 14:38 GMT

மனிதனின் சக்திக்குக் கட்டுப்படாத, புரிந்து கொள்ள இயலாத ஒரு வகை இனம் புரியாத அச்சத்தின் பிரதிபலிப்பே மூட நம்பிக்கைகள். என்றாலும் இதற்கு நவநாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளும் விதி விலக்கல்ல. அந்த அச்சத்தின் உச்சம் தான் இவர்கள் கொண்டாடும் 'ஹேலோவீன்' தினம்.

ஹேலோவீன் என்ற அனைத்து ஆன்மாக்களின் தினம் அமெரிக்காவில் மிகவும் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. மரணம் அடைந்தவர்களின் ஆன்மாக்கள் நிறைவேறாத ஆசைகளுடன் அலைந்து கொண்டிருந்தால் அவை பேயாக மனிதர்களைத் தாக்கும் என்ற மூடநம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது.

ஆவிகளின் நடமாட்டமும், சென்றவர்களின் ஆன்மாக்கள் உலவும் திருவிழாவும் பூமியில் மீண்டும் இறங்கிவரும் இரவு என்றாலே நம் நினைவில் உதிப்பது ஹாலோவீன் கொண்டாட்டம்தான். அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் பல நாடுகளில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகைக்குப் பின்னால் ஆச்சரியமான வரலாறு ஒளிந்துள்ளது.

சம்ஹைன் திருவிழாவிலிருந்து...

இன்றைய ஹாலோவீன் விழாவின் வேர்கள் செல்டிக் (Celtic) இனமக்களின் புராதன விழாவான சம்ஹைன் (Samhain) எனும் அறுவடைத் திருவிழாவிலிருந்து உருவாகின்றன. கிட்டத்தட்ட இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில், குறிப்பாக அயர்லாந்து, இங்கிலாந்து, வடக்கு பிரான்ஸ் பகுதிகளில் வாழ்ந்த செல்டிக் மக்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்வை நடத்தியவர்கள். அவர்களின் புதுவருடம் நவம்பர் 1-க்கு ஒத்திசைவதாக இருந்தது.

சம்ஹைன் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் அது கோடைக்கால முடிவையும், குளிர்காலத்தின் தொடக்கத்தையும், அறுவடை முடிவையும் குறிப்பதாக இருந்தது. புத்தாண்டுக்கு முன்தினமான அக்டோபர் 31 அன்று உயிரிழந்தவர்களின் ஆவிகள் பூமிக்குத் திரும்பிவரும் என்பது செல்டிக் மக்களின் நம்பிக்கை. நல்ல ஆவிகளுடன் தீய சக்திகளும் அலைவதாக அவர்கள் நினைத்தனர். செல்டிக் பாதிரியார்கள் பெரிய நெருப்பு மூட்டி, விலங்குகளை பலியிடுவதுடன் விவசாய விளைபொருட்களையும் நெருப்பில் அர்ப்பணிப்பார்கள். இந்த தருணத்தில் எதிர்காலத்தை கணிக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவது வழக்கம்.


ரோமானியர்களின் செல்வாக்கு

கி.மு முதல் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு செல்டிக் நாடுகளைக் கைப்பற்றியது. அதன்பிறகு இரண்டு ரோமானிய திருவிழாக்கள் சம்ஹைனுடன் கலந்தன. அவற்றுள் ஒன்று, ரோமர்களின் இறந்தோர் நினைவுநாள் - ஃபெராலியா. ஒத்த கருப்பொருளைக் கொண்ட இந்த நாள் பிப்ரவரி மாத இறுதியில் அனுசரிக்கப்பட்டது. மற்றொரு பண்டிகை, விளைச்சல் கடவுளான போமோனாவைக் கொண்டாடுவது. பழங்கள், குறிப்பாக ஆப்பிளுடன் இந்த கொண்டாட்டம் தொடர்புப்படுத்தப்பட்டது. இந்தத் தொடர்புதான் பின்னாளில் ஹாலோவீனில் 'ஆப்பிள் பாபிங்' (Apple bobbing) போன்ற விளையாட்டுகளின் உருவாக்கத்துக்கு வழிகோலியிருக்கலாம்.

அனைத்துப் புனிதர்களின் தினம்

கி.பி 7-ஆம் நூற்றாண்டில் போப் போனிஃபேஸ் IV 'அனைத்துப் புனிதர்களின் தினம்' (All Saints Day) அல்லது "All Hallows Day" கொண்டாட்டத்தை ஆரம்பித்தார். புனிதர்களையும் தியாகிகளையும் கொண்டாடும் நோக்கில் அறிவிக்கப்பட்ட இந்தப் புனித தினம் மே 13-ல் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. அயர்லாந்தில் சம்ஹைன் கொண்டாட்டத்தை படிப்படியாக இந்த கிறிஸ்தவ கலாச்சாரம் மாற்றியமைத்தது என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

சில நூற்றாண்டுகளுக்கு பின்னர், இறந்தவர்களின் நினைவாக நவம்பர் 2-ல் “அனைத்து ஆன்மாக்களின் தினம்” (‘’All Souls' Day’’) உருவானது. இந்தக் கொண்டாட்டங்கள் பழமையான சம்ஹைன் அனுசரிப்புகளோடு ஒத்த அம்சங்களைக் கொண்டிருந்தன. பெரிய தீமூட்டங்கள், ஆடையணிந்து ஊர்வலம் போதல், ஏழைகளுக்கு உணவளித்தல் ஆகியன அதில் அடங்கும். அனைத்துப் புனிதர்களின் நாளின் முந்தைய நாள் "All Hallows’ Eve" என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் அது சுருங்கி இன்றைய “Halloween” (ஹாலோவீன்) ஆனது.

முதன்முதலில் அயர்லாந்தில், அகால மரணமடைந்த புனிதத் துறவிகளின் நினைவாக இந்நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாட்களில் ஹேலோவீன் தினமாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் அக்டோபர் 31-ந்தேதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவுக்கு பயணம் செய்த ஹாலோவீன்

ஐரோப்பாவில் காலூன்றிய ஹாலோவீன் புலம் பெயர்ந்தோர் மூலமாக அமெரிக்க கண்டத்திற்குச் சென்றது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் மேரிலாந்து, தெற்கு குடியேற்ற நாடுகளில் கொண்டாடப்பட்டுவந்த ஹாலோவீன் பெரும்பாலான கிழக்குப் பகுதிகளிலும் பெரும் விழாவாகக் கடைபிடிக்கப்படாமல் இருந்தது. குறிப்பாக ப்யூரிட்டன் எனும் கிறித்தவப் பிரிவுடைய கட்டுப்பாடுகள் அதற்கு ஒரு காரணம்.

சூனிய சம்பவங்கள் என அவர்கள் கருதிய பல்வேறு ஹாலோவீன் அங்கங்களுக்கு அங்கு இடமில்லை. ஆனால் தெற்கத்தியப் பகுதிகளில் ஐரோப்பிய, பூர்வ அமெரிக்க செவ்விந்திய பழக்கங்களின் கலவையாக மெல்லமெல்ல ஹாலோவீன் விரிவடையத்தொடங்கியது. அறுவடை கொண்டாட்டங்களாகவும், கதைகள் சொல்லும் நிகழ்வுகளாகவும், பக்கத்து வீட்டினரை பயமுறுத்தும் குறும்புகள் செய்யும் சந்தர்ப்பமாகவும் இவை உருவெடுத்தன.

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் முடிந்து, பனிக்காலம் தொடங்கும் சமயம் ஒவ்வொரு வீட்டின் முன்பும் பூசனிக்காயை திகிலூட்டும் வகையில் அலங்காரம் செய்து வெளியே வைக்கிறார்கள். ஹேலோவீன் திருவிழாவால் மூட நம்பிக்கைகள், மக்கள் மரபு வழி நம்பிக்கைகள், புராணங்கள், சகுனங்கள் போன்றவற்றை நம்புபவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. இதன் பின்னணியில் பல வேடிக்கையான நம்பிக்கைகளும் வழக்கத்தில் உள்ளன.

ஹேலோவீன் தினத்தன்று, பாரந்தூக்கியால் மேலே ஏற்றப்பட்ட, எரியும் மெழுகுவர்த்தி கெட்ட ஆவிகளின், பேய்களின் ஊளையிடல்களைத் தவிர்க்கச் செய்கிறதாகவும் நம்புகிறார்கள். இந்த தினத்தில் ஒரு மெழுகுவர்த்தி திடீரென காற்றினாலோ, அல்லது மூச்சுக் காற்றினாலோ அணைந்து விட்டால் இறந்து போனவரின் ஆன்மா தங்களை அழைப்பதாகவும் நம்புகிறார்கள்.

ஹேலோவீன் தினத்தில் குழந்தைகள் மாறு வேடங்கள் அணிந்து கொண்டு, குறிப்பாக சூனியக்காரி, பேய், கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் இப்படி ஏதாவது உடை அணிந்து கொண்டு, வீடு வீடாகச் சென்று , டிரிக் ஆர் டிரீட் என்று ஒரு கூடையுடன் சென்று கேட்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் விதவிதமான சாக்லேட்களை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்புவார்கள்.

“ட்ரிக்-ஆர்-ட்ரீட்” (Trick or treat) என்று உடை தரித்துக்கொண்டு வீடுவீடாக கேண்டிகளை சேகரிக்கும் வழக்கம் எவ்வாறு தொடங்கியது என்பது சற்று மர்மமாகவே உள்ளது. ஐரோப்பிய மரபு ஒன்றுதான் இந்த நடைமுறைக்கு தூண்டுதலாய் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அனைத்து ஆன்மாக்களின் தினத்தின்போது ஏழைகள் உணவுக்காக வீடு வீடாகச் சென்று இறந்தவரின் ஆன்மா சாந்திபெற வேண்டிக்கொள்வார்கள். பிரார்த்தனைக்கு கைமாறாக "சோல் கேக்குகள்" எனும் இனிப்பு வகைகள் அவர்களுக்குத் தரப்படும். இதுவே பின்னர் ஹாலோவீனில் குழந்தைகள் இனிப்புகளை வீடுவீடாக வேண்டுவதாகப் பரிணமித்தது.

Tags:    

Similar News