தாத்தா பாட்டிகள் தினம்-வத்திக்கான் தகவல்கள் இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக

வத்திக்கான் திருத்தந்தை கிறிஸ்டோபர் பிரான்சிஸ் தங்கள் வாழ்வு அனுபவத்தை இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் இணைப்புச் சங்கிலியாக தாத்தா , பாட்டிகள் என தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-25 03:30 GMT

தாத்தா பாட்டிகள் தினம்

ஜூலை 25 தாத்தா பாட்டிகள் தினம் - வத்திக்கான் தகவல்கள் இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக

தாத்தா பாட்டிகள் தினம் - வத்திக்கான் திருத்தந்தை கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  தங்கள் வாழ்வு அனுபவத்தை இளையத் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் இணைப்புச் சங்கிலியாக உள்ளனர் தாத்தாக்கள், பாட்டிகள் என தெரிவித்துள்ளார்.


இந்த ஞாயிறு அதாவது, ஜூலை 25 ம் தேதி, வத்திக்கான் திருஅவையில், முதல் தாத்தா பாட்டிகள், மற்றும் முதியோர் தினம் சிறப்பிக்கப்பட்டது. தாத்தா பாட்டிகளையும், முதியோரையும் சிறப்பான விதத்தில் நினைவுகூற உதவும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும், ஜூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமையை அவர்களுக்கென அர்ப்பணிக்கும் நாளாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ம் தேதி, ஞாயிறு இறுதியில் அறிவித்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 26 ம் தேதி சிறப்பிக்கப்படும் கன்னி மரியாவின் பெற்றோர்களாகிய, அதாவது, இயேசுவின் தாத்தா பாட்டிகளான, புனிதர்கள் சுவக்கின் மற்றும் அன்னா ஆகியோரின் திருநாளுக்கு அருகில் வரும் ஜூலை நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இந்த சிறப்பு நாள் இடம்பெறும் என அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆண்டு, இந்த சிறப்பு நாள் ஜூலை 25 ம் தேதி நிகழும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.


மனித வாழ்வில் வயது முதிர்வு என்பது ஒரு கொடையாகும் என்று உரைத்த திருத்தந்தை, முதியோர் என்பவர்கள், தங்கள் வாழ்வு அனுபவத்தை இளையத் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் இணைப்புச் சங்கிலியாக உள்ளனர், என்றும் கூறினார்.

முதியோர், தாங்கள் பெற்றதை மற்றவர்களுக்கு கொடுத்துச் செல்வது, மற்றும், சமுதாயத்தின் அடிப்படை ஆதாரத்தை பாதுகாப்பது போன்ற முக்கியப் பணிகளைப் பெற்றுள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்காமல், இன்றைய சமுதாயம் அவர்களை மறந்து செயல்பட்டுவருவது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாத்தா, பாட்டிகளும், பேரக்குழந்தைகளும் ஒருவரையொருவர் அறிந்து, நெருக்கமாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

இன்றைய சுழலில் தாத்தா பாட்டிகள் தினம் என்பது அத்தியாவசியமான ஒன்று. ஒரு குடும்பத்தில், குறிப்பாக, பேரக்குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகளின் தேவை குறித்த விழிப்புணர்வை இன்றைய சமுதாயத்திற்கு வழங்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.


திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஜூன் 22 ம் தேதி அன்று வழங்கிய சிறப்புச் செய்தியில்...

அன்பு தாத்தாக்களே, பாட்டிகளே, அன்பு வயதுமுதிர்ந்த நண்பர்களே, அகில உலகத் திருஅவை, உங்களுக்கு, நமக்கு, நெருக்கமாக இருக்கின்றது, உங்கள் மீது அக்கறை காட்டுகிறது, அன்புகூர்கிறது, மற்றும், உங்களைத் தனித்துவிட விரும்பவில்லை என்று, உங்களைப் போன்ற, உரோமை ஆயராகிய நான் கூற விழைகிறேன் என, திருத்தந்தை பிரான்சிஸ், அதில் கூறியுள்ளார்.

"எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (காண்க.மத். 28,20) என்ற தலைப்பில், இவ்வாண்டு, ஜூலை 25 ம் தேதி, திருஅவையில் முதன்முறையாகச் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் உலக நாளுக்கென, தான் எழுதியுள்ள செய்தியில், இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் உறுதி கூறியுள்ளார்,

எதிர்பாராத மற்றும், கடுங்கோபம் கொண்ட புயல் போன்று நம்மைத் தாக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இச்செய்தி வெளியிடப்படுகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, இருள்படர்ந்த நேரங்களிலும்கூட, ஆண்டவர் வானதூதர்களைத் தொடர்ந்து அனுப்பி, நம் தனிமையில் ஆறுதலளிக்கிறார், மற்றும், "எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்பதை நினைவுபடுத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்டவர் எப்போதும் நமக்கு நெருக்கமாக இருந்து, புதிய வாய்ப்புக்களை, புதிய கருத்தாக்கங்களை, மற்றும், புதிய ஆறுதல்களை வழங்கிக்கொண்டிருக்கிறார், ஆண்டவர் ஒருபோதும் பணிஓய்வில் இருப்பதில்லை என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.


"உங்கள் முதியோர் கனவுகளையும், உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்" (யோவேல் 2,28) என்று இறைவாக்கினர் யோவேல் கூறிய சொற்களை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, உலகின் வருங்காலம், இளையோருக்கும், முதியோருக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையைச் சார்ந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

இளையோரின்றி, வேறு எவரால், முதியோர்களின் கனவுகளை நிஜமாக்க முடியும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ள திருத்தந்தை, முதியோர் தொடர்ந்து கனவு காணவேண்டும் என்றும், நீதி, அமைதி, தோழமை ஆகியவை பற்றிய கனவுகளை இளையோர் இயலக்கூடியதாய் ஆக்குவதற்குத் தேவையான புதிய பார்வையை அவர்கள் வழங்கவேண்டும் என்றும், இவ்வாறு நாம் ஒன்றுசேர்ந்து வருங்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.

"எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று நம் ஆண்டவர் கூறிய திருச்சொற்களை நாம் அனைவரும், குறிப்பாக இளையோர் அடிக்கடி சொல்வதற்கு கற்றுக்கொள்ளவேண்டும், இச்சொற்கள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லவைக்கின்றன என்றுரைத்து, தன் ஆசீரோடு திருத்தந்தை பிரான்சிஸ் இச்செய்தியை நிறைவுசெய்திருந்தார்,

குடும்ப உறவுகள் அந்நியமாகிப் போனதன் முதல் அபாயமே, வீட்டின் முதியோர் புறக்கணிப்பு தான். நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரங்களில் ஒன்றான நம் தாத்தா, பாட்டிகளை, தனிக்குடும்பம் என்ற போர்வையில் இழந்துவருகிறோம். அவர்களையும் தனிக் குடும்பமாக்கி தனிமைப்படுத்தி விட்டோம். ஆய்வுகளோ, தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பான சூழலில், தைரியமான மன நிலையில் வளர்வதாக தெரிவிக்கின்றன. அந்த பாக்கியம், வரம், இன்று ஒரு சில குழந்தைகளுக்குத்தான் கிடைக்கின்றது.


தாத்தா, பாட்டியுடன் விளையாடி அவர்களுடைய கதைகளைக் கேட்டு வளர்ந்த கடைசி தலைமுறையாக நாம் இருப்போமோ என்ற அச்சம்தான் மேலோங்கி நிற்கிறது. குழந்தைகளை விட பாட்டி, தாத்தாவின் அனுபவமும், அறிவும் அதிகம் என்பதால் அவர்களிடம் வளரும் குழந்தைகளுக்கும் அத்தனையும் கிடைக்கிறது. ஆனால் நாம், சிறிய இலாபங்களை கணக்கில் எடுத்து, பெரிய இழப்புக்களை சுமந்து கொண்டிருக்கிறோம்.

தாத்தா, பாட்டிகளுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஏனென்றால், தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள், விருப்பங்களை, தாத்தா, பாட்டிகளோடு தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், நாமோ, குழந்தைகளோடு அமர்ந்து விளையாடக்கூட நேரமில்லாமல், பொய்யான மதிப்பீடுகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். மற்ற குழந்தைகளை விட தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக உறுதியாகியுள்ளது.

தாத்தா, பாட்டிகளுடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகளில், பெற்றோரைப் பிரிந்து அந்நியமாக இருக்கும் உணர்வு எழாது, வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாகவே உணர்வார்கள். தாத்தா, பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள், குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வதுடன், உறவுகளின் உன்னதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பைக் கொடுப்பார்கள். குடும்ப சூழ்நிலை, பெற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்களை தாத்தா-பாட்டிகள் குழந்தைகளுக்கு சொல்லி புரியவைப்பார்கள்.

பாசம், மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகளும், தாத்தா பாட்டிகள் வழி வளர்த்துக் கொள்வார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்துகொள்வார்கள். வாழ்வின் எதார்த்தங்களை குழந்தைகளுக்கு எளிதாக புரியவைப்பது, தாத்தா-பாட்டிகள் அவர்களுக்குச் சொல்லும் கதைகளே.


வயதாகும்போது ஞாபகமறதி, மனச் சோர்வு போன்ற பாதிப்புகளுக்கு பலர் ஆளாவது உண்மை. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்ன வென்றால், இந்த நோய்களெல்லாம் முதியவர்கள் தனிமையில் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா, பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கும்போது, இருபக்கமும் நல்விளைவுகள் ஏற்படுகின்றன. அப்போது, வீட்டில் தனிமை விலகி இனிமை நிலவும்.

கயிற்று கட்டிலில் நிலாவை காட்டிக்கொண்டே காற்றோட்டத்துடன் கதை சொல்லும் தாத்தா பாட்டிகள் எங்கே? இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் தனி வீட்டிலோ, அல்லது முதியோர் இல்லங்களிலோ முடக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். குழந்தைகளை முதல் நாள் பள்ளியில் கொண்டுபோய் விடுவதில், ஒரு தாத்தாவுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவுகோல் உண்டா? சிறு சிறு உதவிகளை ஆற்றி, குடும்பத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கும் மூத்த உறவுகளை உதறிய பாவத்தின் தண்டனையை இன்றைய தலைமுறை அனுபவித்து வருகிறது.

தாத்தா, அதாவது, குடும்பத்தின் முத்த உறுப்பினர் வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள். தாமதமாக வீட்டிற்கு வந்தால், கதவை தட்டியவுடன் முதல் ஆளாய் கதவை திறந்து 'ஏன்டா லேட்' என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன் கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது. அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு 'குடிமகன்கள்'முளைத்துவிட்டனர்.

குழந்தை பருவத்தில் உண்டியல்தான், தாத்தா கொடுக்கும் முதல் பரிசு. சேமிப்பு பழக்கத்தை முதல் காசு போட்டு தொடங்கி வைக்கும் தாத்தாக்கள் இன்றும் தொலைதூர கிராமங்களில் உண்டு.


தாத்தா பாட்டி உறவுகள் தற்போதைய குழந்தைகளுக்கு கிடைக்கிறதா என்றால், கேள்விக்குறிதான். தாயின் அன்பை போன்றே தாத்தா பாட்டிகளின் அன்பும் ஈடு இணையற்றது. எந்த ஒரு செயலையும் பக்குவமாய் அணுகி தீர்வு சொல்வது தாத்தாவின் கைவண்ணம். வயதும், அனுபவமும் தாத்தாவை பக்குவப்படுத்துகிறது. ஆனால், அந்த நிதானமும் பொறுமையும் இல்லாததால், இன்று இளைய தலைமுறை இயந்திர கதியாக இயங்குகிறது. சிந்திப்போம். இணைப்புச் சங்கிலிகளின் முக்கியத்துவம் உணர்வோம்.

பாட்டியைப் போன்ற சிறந்த மருத்துவரும் இல்லை, தாத்தாவை விட உயர்ந்த ஆசிரியரும் இல்லை.

Tags:    

Similar News