ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 52 சதவிகிதம் அதிகரிப்பு
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.;
சமீபகாலமாக புதிய வகை கொரோனா திரிபான ‘ஜெஎன்.1’ மற்றும் ஓமிக்ரான் ‘பிஏ.2.86’ வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும், கொரோனா திரிபான ‘ஜெஎன்.1’ கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 28 நாள்களில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 8 சதவிகிதம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
சுமார் 1.18 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில், 1,600 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 17ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை மொத்தம் 77.2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
‘ஜெஎன்.1’ வகை கொரோனாவின் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. பனிப்பொழிவு அதிகமாக உள்ள நாடுகளில் மட்டும் ‘ஜெஎன்.1’ வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.
கொரோனாவால் மட்டும் இன்றி ஃப்ளூ, நிமோனியா போன்ற பாதிப்புகளாலும் சுவாசப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.