கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் பிரான்ஸை சேர்ந்தவர்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமீப நாட்களில் நடைபெற்ற பிரெஞ்சுக்கார்களுக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் புல்லட்களால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர், இதில் வன்முறைக்காரர்களால் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பிரெஞ்சுக்கார்களுக்கு எதிரான புரட்சி வெடித்துள்ளதால் பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் தற்காலிகமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
முகமது நபியை சித்தரிக்கும் கார்டூன்களை மீண்டும் வெளியிடுவதற்கான ஒரு பத்ரிகைக்கான உரிமைக்கு அண்மையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஒப்புதல் அளித்தார். இது கடவுள் நிந்தனை என்று பாகிஸ்தானிய வலதுசாரி கட்சியான தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நபியின் நன்மதிப்பை பாதுகாப்பதில் நாங்கள் முனைப்பாக இருக்கிறோம், ஆனால் போராட்டக்காரர்கள் வைத்த கோரிக்கை என்பது பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத தேசமாக சர்வதேச சமூகத்தின் முன் காட்டிவிடும் வகையில் உள்ளது என்றார்.
மேலும் அக்கட்சியின் தலைவரான சாத் ரிஸ்வி, பிரான்ஸ் நாட்டின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து பிரான்ஸ் தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இதனையடுத்து நேற்று சாத் ரிஸ்வியை கைது செய்த பாகிஸ்தான் அரசாங்கம், அவரின் கட்சிக்கும் தடை விதித்துள்ளது.