பிலிப்பைன்ஸில் 'ராய்' புயலின் கோரதாண்டவம்: உயிரிழப்பு 208 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த ‘ராய்’ புயலின் கோரதாண்டவத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-12-20 08:05 GMT

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதி.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் 'ராய்' புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகணங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின.

இந்த புயலின் காரணமாக மணிக்கு 168 கி.மீ. வேகம் சூறாவளிக் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் மின் கம்பங்கள் சேதமாயின. மேலும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளும் கடலுக்குள் மூழ்கின.

தொடர்ந்து பெய்த பலத்த மழையால் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் மின் விநியோகம் இன்றி இருளில் மூழ்கியது.

சுமார் 4.90 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 239  பேர் காயமடைந்துள்ளனர். 52 பேரை காணவில்லை.

இதுவரை வெள்ளம் மற்றும் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளதாகவும், மேலும் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் பாதித்த மாகாணங்களுக்கு மீட்புப்பணிக்காக சுமார்  40 மில்லியன் டாலர்களை வழங்க அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே உறுதியளித்துள்ளார்.

Tags:    

Similar News