பாலியல் வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்ட 91 வயது கனடா கோடீஸ்வரர்
கற்பழிப்பு, பெண் மீது அநாகரீக தாக்குதல், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான 91 வயதான ஃபிராங்க் ஸ்ட்ரோனாக் கைது செய்யப்பட்டார்;
கனடா கோடீஸ்வரர் ஃபிராங்க் ஸ்ட்ரோனாச்
கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஃபிராங்க் ஸ்ட்ரோனாச் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 91 வயதான தொழிலதிபர், டொரோண்டோ புறநகர் பகுதியான அரோராவில் இருந்து கைது செய்யப்பட்டார்.
பீல் பிராந்திய காவல்துறை அதன் அறிக்கையில், 1980 களில் இருந்து 2023 வரை பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகக் கூறியது.
"ஃபிராங்க் ஸ்ட்ரோனாக் கைது செய்யப்பட்டு, கற்பழிப்பு, ஒரு பெண் மீது அநாகரீகமான தாக்குதல், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தல் உள்ளிட்ட ஐந்து கிரிமினல் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டார்" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், உரிய தகவல் தெரிந்தால் முன்வருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாகன உற்பத்தியாளர்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் கனடாவின் மேக்னா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ட்ரோனாச், நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டு, பின்னர் பிராம்ப்டனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் "முற்றிலும் மறுப்பதாக" அவரது வழக்கறிஞர் கூறினார்.
"குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாக பதிலளிப்பதற்கும், ஒரு பரோபகாரராகவும், கனேடிய வணிக சமூகத்தின் அடையாளமாகவும் தனது மரபைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை அவர் எதிர்நோக்குகிறார்" என்று ஸ்ட்ரோனாச்சின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரையன் கிரீன்ஸ்பான் கூறியதாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது
ஊடகங்களில் வெளியானதைத் தாண்டி எழுப்பப்பட்ட விசாரணை அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மேக்னா நிறுவனம் கூறியுள்ளது
"2010 இல் கட்டுப்பாட்டை கைவிட்டதில் இருந்து ஸ்ட்ரோனாச் மேக்னாவுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை" என்று மேலும் தெரிவித்துள்ளது