இந்திய பிரபலங்களின் பினாமி சொத்துகளை வெளியிட்ட பண்டோரா ஆவணங்கள்
வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது
பினாமி சொத்து குவிப்பில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் உள்பட 380 இந்தியர்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பன்னாட்டுப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists - ICIJ) இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களிலிருந்து கசிந்த 1.19 கோடி ஆவணங்களை 600-கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு பனாமா ஆவணங்கள் (Panama Papers) வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பண்டோரா ஆவணங்கள் (Pandora Papers) வெளியாகியுள்ளது.அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பண்டோரா ஆவணங்களில், உலகத் தலைவர்களின் அறியப்படாத பண மோசடிகள், சட்டவிரோத பரிவர்த்தனைகள், வெளிநாடுகளில் பினாமி சொத்துகள் ஆகியவற்றை வெளிப்படுத்தியது.
அறிக்கையில் 91 நாடுகளைச் சேர்ந்த 330-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும் இடம்பெற்றுள்ளனர்.குறிப்பாக வங்கி மோசடி வழக்கில் இந்தியாவிலிருந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி சகோதரி, பாகிஸ்தான் அமைச்சர்கள், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், கென்யா அதிபர் உஹுரு, பாப் இசை பாடகி ஷகிரா, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது சகோதரி, தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியது தொடர்பான தரவுகளின் மூலம் அவரது சகோதரியின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.பனாமா ஆவணங்கள் வெளியான மூன்று மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தைக் கலைக்கும்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மட்டும் 380 பிரபலங்களும், பாகிஸ்தானிலிருந்து 700 பிரபலங்களும் இந்த மோசடிப் பட்டியில் உள்ளதாக ஆவண தரவுகள் தெரிவிக்கின்றன.2016ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை ஜெர்மனியைச் சேர்ந்த ஊடகம் ஒன்று வெளியிட்டது. பன்னாட்டுப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புப் புலனாய்வு செய்து இந்தப் பட்டியலை வெளியிட்டது.
இதில், திரைப்பட நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவன தலைவர் கேபி சிங், அவருடைய ஒன்பது குடும்ப உறுப்பினர்கள், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள பண்டோரா ஆவணங்களில் கூறப்பட்டுள்ள பிரபலங்கள் அனைவரும் குற்றம் செய்தவர்கள் என்பது நிரூபணமாகவில்லை. வெளியாகியிருக்கும் ஆவணங்களைக் கொண்டு, எடுக்கப்படும் அடுத்தக்கட்ட சட்டரீதியிலான நடவடிக்கைகளை பொறுத்தே அவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோத பணமோசடியில் ஈடுபட்டனரா என்பது தெரியவரும்.